Sep 22, 2010

முடிவு உங்கள் கையில் ?


யார் நம்மை ஆள வேண்டும் !

இன்றைய பதிவை ஒரு கதை வழியாகப் பார்ப்போமா?  முன்னொரு காலத்தில் காசு, தியா என்னும் பெயருடைய இரண்டு நாடுகள் இருந்தன.  இரண்டும் பக்கத்துப் பக்கத்து நாடுகள்.  இரண்டு நாடுகளுமே ஒரு கொடியவனிடம் அடிமையாக இருந்தன.  அவற்றில் தியா நாடு இன்னொரு நாட்டை விட அளவிலும் மக்கள்தொகையிலும் பெரிய நாடு. காசு நாடு மிகவும் அழகான நாடு.   அந்த இரு நாடுகளிலும் திடீரென மக்கள் புரட்சி ஏற்பட்டு அக்கொடியவன் நாட்டை விட்டே ஓடி விடுகிறான்.  பின்னர் தியா நாட்டு மக்கள் எல்லாம் ஒன்று கூடி நமக்கென ஒரு குடியரசு அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கிறார்கள்.  அப்படியே குடியரசு அமைகிறது. 
காசு நாட்டிலோ பழைய காலத்து மன்னராட்சி தொடர்கிறது. அந்நாட்டிலும் மக்களாட்சி வேண்டும் மன்னராட்சி ஒழிய வேண்டும் என்னும் கருத்து மக்களிடையே பரவி வருகிறது.   அதற்காகச் சில தலைவர்கள் போராடி வருகிறார்கள்.  இதற்கிடையே தியா நாட்டிடம் இருந்து பிரிந்து போய் இருந்த சுதான் நாட்டின் உதவியுடன் பக்கத்தில் இருந்த சில மக்கள் சின்ன நாட்டின் மன்னன் அரி மீது படையெடுக்கிறார்கள்.  அரண்டு போன மன்னன் தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தியா நாட்டின் உதவியை நாடுகிறான்.  உடனடியாகத் தியா நாடு தன்னுடைய இராணுவத்தை அங்கு அனுப்பிப் போரிட்டு வெற்றி பெற்றுவிடுகிறது.  இவ்வெற்றிக்குப் பின் தன்னுடைய இராணுவத்தை அங்கேயே நிறுவிக் காசு நாட்டைத் தன்வசப்படுத்திக்கொள்கிறது.  மன்னனும் சில நாட்களில் ஓடிப் போய் விடுகிறான்.  
காசு நாட்டு மக்களுக்கோ பெரிய குழப்பம் வந்து விடுகிறது.  ‘என்னடா இது?  மன்னராட்சி வேண்டாம் என்று மன்னனை விரட்ட நினைத்தோம்.  இப்போது மன்னன் ஓடிப்போய்விட்டான்.  ஆனால் அவனுக்கு மாற்றாக இராணுவம் அல்லவா வந்துவிட்டது!  இப்படி நம்முடைய வாழ்க்கை ஆகிவிட்டதே!  என்று அம்மக்களுக்கு ஒரே வருத்தம்!  ‘நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம்.   உங்களுடைய இராணுவத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்று தியா நாட்டை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கிவிடுகிறார்கள்.  மன்னனுக்கு உதவுவது போல் உதவி மன்னனை விரட்டி விட்டால் அழகான காசு நாடு நமக்குக் கிடைத்து விடும் என்று கனவு கண்டுகொண்டிருந்த தியா நாட்டுக்கோ மக்கள் போராட்டம் புதிய தலைவலியாக அமைந்து விட்டது.  யாருக்கும் தெரியாமல் இந்தச் சிக்கலை மூடி மறைத்து விடலாம் என்று முயன்று பார்த்தது.  ஆனால் தியா நாட்டின் நிலையை அறிந்த பிற நாடுகள் எல்லாம் திரண்டு வந்து விட்டன. 
         
          உடனடியாகப் பெரிய நாடு அமுக்கமாக ஒரு திட்டம் தீட்டியது.  ‘நாங்கள் ஒன்றும் காசு நாட்டைக் கைப்பற்றவில்லை.  அந்த நாடு எங்களுக்குத் தேவையும் இல்லை!  அந்நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கவிரும்புகிறார்களா?  தனி நாடாக இருக்க  விரும்புகிறார்களா?  இல்லை வேறு நாட்டுடன் போக விரும்புகிறார்களா?  என்று நாங்கள் வாக்கெடுப்பு நடத்துவோம்’ என்று உலக நாடுகளிடம் கூறியது.  பிற நாடுகளும் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.  ஆனால் அதைச் செய்தால் எங்கே அழகான காசு நாடு நம்மை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டு தியா நாடு இன்று வரை அதைச் செய்யவே இல்லை. வாக்கெடுப்பு நடத்தாதது மட்டுமில்லை – காசு நாடு தனி நாடு இல்லை.  அது எங்களுடைய ஒரு பகுதி என்று உரிமை வேறு கொண்டாடத் தொடங்கிவிட்டது. 
நீங்களே சொல்லுங்கள்!  தியா நாடு செய்வது சரியா?  காசு நாடு யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தாமே முடிவு செய்ய வேண்டும். 
இது கதையில்லை உண்மை!  ஆமாம்! இக்கதையில் வரும் காசு நாடுதான் காசுமீர்!  தியா நாடுதான் இந்தியா!  அந்த மன்னர் தான் அரிசிங்கு!  1948 ஆம் ஆண்டு சனவரி ஒன்றாம் நாள் இச்சிக்கலைப் பன்னாட்டு அவைக்குக் கொண்டு சென்ற இந்திய அரசு வாக்கெடுப்பு நடத்திக் காசுமீர்ச் சிக்கலைத் தீர்ப்பதாகச் சொன்னது.  ஆனால் இன்று வரை அதைச் செய்யவே இல்லை!  இது மட்டுமில்லை!  அம்மக்கள் தாம் அச்சிக்கலுக்குத் தீர்வு தர வேண்டும் என்று சொன்ன காசுமீர் தலைவர் சேக் அப்துல்லாவையும் ஏறத்தாழ பதினோர் ஆண்டுகள் இந்திய அரசு சிறையில்  அடைத்து விட்டது.  


இந்தியாவின் இச்சூழ்ச்சியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் பாகிசுதானும் காசுமீர் தனக்கே என்று கூறிவருகிறது.  இப்படி இந்தியாவின் ஆதிக்க வெறியாலும் பாகிசுதானின் ஆதிக்க வெறியாலும் பாழாகிப் போனது காசுமீர் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கைதான்!  ஒவ்வொரு நாளும் வீட்டு முன்னர் இராணுவத்தினர் துப்பாக்கியுடன் இருப்பதைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 

கிழக்குப் பாகிசுதானில் இருந்த மக்கள் பாகிசுதானில் இருந்து பிரிய விரும்பினார்கள். அப்போது மனமுவந்து சென்று அம்மக்கள் போராட்டத்தில் இருந்த நியாயத்தை மதித்து வங்காளத் தேசமாகப் பிரித்துக் கொடுத்த இந்தியா, காசுமீரிலும் அம்மக்களை மதித்திருக்க வேண்டாமா?   வங்காளத் தேச நாட்டு மக்களுக்கு ஒரு நீதி!  காசுமீர் மக்களுக்கு ஒரு நீதியா? 

Sep 18, 2010

கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைவிரித்தாடும் சாமியார்களின் அட்டகாசம்

கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது, கடலும், கடல் சார்ந்த மக்களும் அவர்களின் தொழிலும்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சுனாமியின் சுவடுகள்  மீனவ மக்களின் மனதை விட்டு அகலாத நிலையில் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சாமியார்கள் நடத்தும் புது வகை கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர் மீனவ மக்கள்.



கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள் வீட்டிற்கு மின்சார இணைப்பு வேண்டும் எனில் அரசு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தால் வீட்டிற்கு மின்சாரம் வராதாம். அப்புறம் என்னதான் செய்ய வேண்டும் என்கிற உங்களின் சந்தேகம் நியாயம்தான். ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் சுய உதவிக்குழுக்கள் போன்று அன்பயம் என்ற பெண்கள் அமைப்பு ஒன்று செயல்படுகிறது. அந்த அமைப்பின் தலைவி கையெழுத்து இட்டதால்தான் உங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்கும். அட இது அரசாங்க அமைப்பு அல்ல என்பது உங்களுக்கு கூடுதல் தகவல். அதைவிட பெரிய அமைப்பாம். மீனவ கிராமங்களில் உள்ள தேவலாயங்களின் சார்பில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் உறுப்பினர் ஆக முடியாது என்பது கூடுதல் தகவல். பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது என்ற போர்வையில் மத போதகர்களின் கட்டுப்பாட்டில் இந்த அமைப்பு உள்ளது. 20 பெண்கள் கொண்ட ஒரு குழுவிற்கு தலைவி ஒருவர் இருப்பார். இதேபோல் 10 முதல் 15 குழுக்கள் வரை ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளன. இந்த குழுக்களின் தலைவராக ஒரு பாதிரியார் இருப்பாராம். இதில் என்ன தவறு என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த குழுக்களின் தலைவி அனுமதி கொடுத்தால் மட்டுமே அரசு சலுகைகள் முதல் எதுவுமே உங்களுக்கு கிடைக்குமாம். அதுமட்டுமல்ல மீனவ மக்களில் சிலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களது குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் (பெயர் இடும் விழா) தேவாலயத்தில் நடத்த வேண்டும் எனில் அந்த அன்பயம் என்ற அமைப்பின் தலைவியிடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்படுகிறது. ஊர் கூடி தேர் இழுப்பதில் தவறில்லை. அதற்காக தங்களது குடும்ப விவகாரங்கள் முதல் அனைத்திற்கும் தேவாலய பிரதிநிதிகளிடம் கைகட்டி நிற்க வேண்டும் என்பதை பார்க்கும்போது நமக்கு இது புது வகை தீண்டாமையாகதான் தெரிகிறது. மிகவும் பிற்படுத்தபட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மதம் மாறியுள்ளனர். ஆனால் அங்கும் அடிமைதனத்தை உருவாக்குவது எவ்விதத்தில் நியாயம் என்பதே நமது கேள்வி. நமக்கு கிடைத்த ஆதாரபூர்வமான தகவலின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதியுள்ளோம். எந்த மதத்திற்கும் ஆதரவாகவோ, எதிராகவோ நினைக்க வேண்டாம் என்பதே ஜுனியர் ரிப்போர்ட்டரின் அன்பான வேண்டுகோள். இந்த புதுவகை தீண்டாமையை எதிர்த்து போராட மீனவ கிராமங்களில் இளைஞர் கூட்டம் ஒன்று தயாராகி வருகிறது என்பதையும் உங்கள் பார்வைக்கு தெரியபடுத்துகிறோம்.

Sep 16, 2010

தேனால் உயிருக்கு ஆபத்து – அதிர்ச்சி ரிப்போர்ட்


உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தேன் 
இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை... இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.

டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும் 12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம். டாபர் (Dabur), பைதியான்ந் (Baidyanth), பதஞ்சலி ஆயுர்வேதா (Patanjali Ayurveda), காதி(Khadi) மற்றும் ஹிமாலாயா (Himalaya) உள்ளிட்ட நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள் சார்பில் விற்கப்படும் தேன் பாட்டீல்களில் தடை செய்யப்பட்ட ஆன்டி பயாடிக் எனப்படும் குளோரோபெனிகல், சிப்ரோ பிளாக்சின் மற்றும் எரித்ரோமைசின் போன்றவற்றின் குண நலன்கள் அதிகளவில் காணப்படுகின்றன என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  இந்த வகை ஆன்டி பயாடிக்கினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர் சத்யா அச்சத்துடன் எச்சரிக்கிறார்.
இதனால்தான் இந்திய வகை தேன்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை உள்ளதாகவும், சர்வதேச தரத்திற்கு இந்திய நிறுவனங்களின் தேன்கள் இல்லை என்றும் அறிவியல் மற்றும் சுற்றுபுறத்துறை மையத்தின் துணை இயக்குனர் சந்திர பூஷன் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 2 நிறுவனங்களின் தேனிலும் இதுபோன்று மனித உடலை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும், அதனை அந்நாட்டு அரசே தடை செய்துள்ளது என்றும், ஆனால் அவை சர்வசாதரணமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் கவலையுடன் கூறுகிறார். இப்பிரச்சினை குறித்து மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் எடுத்து கூறியபோது, நாங்கள் தேனை தயாரிப்பதில்லை என்றும், அதனை வெளி மார்க்கெட்டில் வாங்கி எங்களது நிறுவனங்களின் ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி விற்பனை செய்வதாக அந்நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களிடம் அலட்சியமாக தெரிவிக்கின்றனர் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நரேன் கூறினார்.  

இந்த தகவல் எல்லாம் மத்திய அரசுக்கு தெரியும் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதனால்தான் மேலே கூறியபடி இந்திய உயிர்களை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை என்று நாம் ஆணித்தரமாக கூறினோம். சரி இவர் எப்படி ஆணித்தரமாக மத்திய அரசுக்கு தெரியும் என்று கூறுகிறார் என பார்ப்போம். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய தேன்கள் சர்வதேச தரத்திற்கு இல்லை என ஏற்றுமதி நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதனை பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்றும் சுனிதா நரேன் தெரிவித்துள்ளார். ஆனால் இவைகளை உள்ளூர் சந்தையில் விற்க மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என அவர் வருத்தத்துடன் தெரிவிக்கிறார். இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் உள்ள 27 நாடுகளும் இந்திய வகை தேன்களுக்கு தடை விதித்துள்ளன. ஆனால் இந்தியாவில்...? எதை  நம்பி வாங்குவது எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு பதில் அளிக்குமா மத்திய அரசு ? பொறுத்திருந்து பார்ப்போம்.

Sep 15, 2010

விதை நெல்லைச் சாப்பிடும் பசி எனக்கில்லை

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது.  அதில் சிறப்புரையாற்ற தமிழகத் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர்.  வரவேற்புக் குழுத் தலைவரோ அமைச்சர் ஒருவரோ தலைவர்களைச் சந்தித்து அழைக்க வேண்டும் என முடிவாயிற்று.  ஆனால் அண்ணா அதை ஏற்கவில்லை.  மாறாகத் தானே நேரில் சென்று இராசாசி, பெரியார், காமராசர், சீவா உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார்.  அவரது அன்பான அழைப்பை ஏற்று, மாநாட்டிற்கு இந்தத் தலைவர்கள் வந்தபோது மாநாட்டின் முகப்பில் நின்று அனைவரையும் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றவர் அண்ணா.
-       தினமணி வெளியிட்டுள்ள அண்ணா நூற்றாண்டு மலர் இதழில் பழ. நெடுமாறன்.

விதை நெல்லைச் சாப்பிடும் பசி எனக்கில்லை
            1967ஆம் ஆண்டு முதல்வர் அண்ணா, செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.  அதில் ஒரு நிகழ்ச்சியாக, நான் கல்வி பயின்ற பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாலையில் உரையாற்றினார் அண்ணா.
            அண்ணாவை வரவேற்றுப் பேசிய கல்லூரி முதல்வர் இராசநாயகம் அடிகளார், ‘எங்கள் கல்லூரியில் அறிவியல் பாடம் உண்டு, பொருளாதாரப் பாடம் உண்டு, அரசியல் பாடத்திற்கு மட்டும் இடம் இல்லை.  நெல்லை சட்டப்பேரவை உறுப்பினரான ஏ. எல்.எசும் எட்மண்டும் எங்கள் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் என்பதால் பெருமைப்படுகிறேன்’ என்றார்.
            பின்னர் பேசிய அண்ணா, தனது உரையில் ‘கல்லூரி முதல்வர் அடிகளார் அவர்கள் நான் இங்குள்ள மாணவர்களை அரசியலுக்கு அழைத்துச் சென்றுவிடுவேனோ என்று அச்சப்படுகிறார். அந்த அச்சம் தேவையில்லை. நான் மாணவர்களை விதை நெல்லாகக் கருதுபவன், விதையை விதைத்து அதனை நாற்றாக்கி நாற்றைப் பிடுங்கி வயலில் நட்டு அதிக விளைச்சல் பெற வேண்டுமென்று கருதுகின்ற அரசியல்வாதி நான்.  விதை நெல்லையே எடுத்துச் சமைத்து சாப்பிடுகின்ற அளவு எனக்கு அரசியலில் பசி கிடையாது. 
-       தினமணி வெளியிட்டுள்ள அண்ணா நூற்றாண்டு மலர் இதழில் அ.இல. சுப்பிரமணியன்

Sep 13, 2010

பிரதமர் ம(ண்)மோகனின் தேசிய கவலை

அருந்ததி ராய்





2010 செப்டம்பர் இருபது OUT LOOK இதழில் வெளிவந்துள்ள ஊடகவியலாளர் அருந்ததிராயின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
Cartoon Courtesy -www.cartoonstock.com                         
            இந்திய அரசு இரண்டே இரண்டு வாரங்கள் நடத்தப்போகும் விளையாட்டுப் போட்டிக்காகத் தொள்ளாயிரம் கோடி ரூபாயைசெலவழிக்கிறது.  அத்தனையும் மக்களுடைய பணம்!  இத்தனைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல், மலேரியா, டெங்கு எனப் பல காரணங்களைக் கூறிப் பன்னாட்டு வீரர்கள் பலர் இப்போட்டியைப் புறக்கணித்து விட்டார்கள்.  இங்கிலாந்து இராணிக்கோ இப்போட்டிகள் (காமன்வெல்த் நாடுகள் என்பவை இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த நாடுகள் அனைத்தும்தாம்!) பற்றிக் கனவு கூட வரவில்லை.  இவ்வளவு பணத்தையும் அரசியலாளர்களும் விளையாட்டுத்துறை அலுவலர்களும் தாம் பங்கு போடப் போகிறார்கள்.  ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கு குறைவாகச் சம்பாதிக்கும் நம்முடைய மக்களுக்கு ‘இவ்வளவும் நம்முடைய பணம்’ என்பது கூடத் தெரியாது.  அவர்களைப் பொறுத்தவரை இந்த விளையாட்டுப்போட்டிகள் எல்லாம் கண்ணுக்கெட்டாத கற்பனைதான்! 

அறுபத்து நான்காவது ஆண்டு விடுதலை நாள் விழாவில் மன்மோகன்சிங்கு எப்படிப் பேசியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பதன் கற்பனைதான் இது!
                        ‘சகோதர சகோதரிகளே!  நீங்கள் எல்லோரும் உணவுப்பொருள் விலை பற்றிக் கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!  நம் நாட்டில் அறுபத்தைந்து கோடிப் பேர் உழவர்களாகவும் உழவுக்கூலிகளாகவும் இருக்கிறீர்கள்!  ஆனால் பாருங்கள்!  உங்களுடைய மொத்த உழைப்பினால் பதினெட்டு விழுக்காட்டிற்கும் குறைவான அளவில்தான் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு உதவுகிறீர்கள்!  தகவல்தொழில்நுட்பத்துறையைப் பாருங்கள்!  மக்கள் தொகையில் 0.2 விழுக்காடு தான் இருக்கும் அவர்களால் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஐந்து விழுக்காட்டளவு உதவி கிடைக்கிறது.  உங்களையும் அவர்களையும் சமமாக எப்படி ஒப்பிடுவது ?
என்னருமைக் குடிமக்களே!  நூறு கோடிஸ்வர இந்தியர்களின் கைகளில் நாட்டின் இருபத்தைந்து விழுக்காட்டு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) இருக்குமாறு நம்முடைய பெருமைமிக்க இந்தியாவை உருவாக்கி வருகிறோம்.  சொத்து ஒரே இடத்தில் இருப்பது தானே நல்லது?  பத்துப்பேர் சேர்ந்து சமைத்தால் சாப்பாடு சுவையாக இருக்காது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்!  ஆகவே நமது கோடிஸ்வரர்களும் அவர்களுடைய சொந்தங்களும் அவர்களுக்கு நெருக்கமான அரசியலாளர்களும் நன்றாக வாழுமாறு நாம் பார்த்துக்கொள்கிறோம். 
             இவற்றை எல்லாம் குடியாட்சி மூலம் மட்டும் கொண்டு வந்துவிட முடியாது என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.  ஆகவேதான் கனிமவளம் நிறைந்த பகுதிகளில் வாழ்வோரை இராணுவம், காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, ஆயுதப்படை, தொழிற்சாலைப் பாதுகாப்புப்படை, இந்தோ திபெத்தியப் படை எனப் பல படைகளைக் கொண்டு நொறுக்கி வருகிறோம்.  இந்த வகை ஆய்வுகளை நாகலாந்து, மணிப்பூர், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் தான் தொடங்கினோம். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை.  ஆகவே தான் குடியாட்சி அங்கே வர வேண்டும் என்பதற்காக அரைக் கோடிப் பேருக்கும் அதிகமான இராணுவ வீரர்களைக் களம் இறக்கியிருக்கிறோம்.  அங்கே ஊரடங்கு இருந்த போது காவல்துறை மீது கற்கள் வீசிய காஷ்மீரிய இளைஞர்கள் அனைவரும் லஷ்கர் இ – தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர்.  அவர்களும் வேலை கேட்டு இப்படிக் கற்களை வீசினார்களே தவிர விடுதலை கேட்டு இல்லை!  ஆனால் ஐயோ பாவம்!  அவர்களுடைய விண்ணப்பங்களைப் படித்து என்ன வேலை கொடுக்கலாம் என முடிவெடுக்கும் முன்பே நம்முடைய காவல்துறையால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள்!  ஆகவேதான் இனிமேல் அவர்களைச் சுட்டுக்காயப்படுத்தினால் மட்டும் போதும் – கொல்ல வேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறேன். 


 
Related Posts with Thumbnails

Sample text