(காவல்துறையின் கண்ணியம் மிக்க வார்த்தைகள் கடைசி 15 நொடிகளில்...)
சென்னை அருகே இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல் நடத்தினார். இளம் பெண் கொலையில் மர்மம் இருப்பதாக கூறப்படும் நிலையில், கொலை பற்றிய தகவல்களை மறைக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரி நடந்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.சென்னை பள்ளிக்கரணையை அடுத்த சாய்கணேஷ் நகரில் இளம் பெண் ஒருவர் எரித்துகொல்லப்பட்ட நிலையில் கிடப்பதாக தகவல் பரவியது. இதனை அறிந்த செய்தியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை தகவல் சேகரிக்க விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மடிப்பாக்கம் உதவி ஆணையர் தங்கரத்தினம் தகாத வார்த்தைகளாலும் சாடினார்.
அண்மை காலமாக, மடிப்பாக்கம் பகுதியில் இதுபோன்ற கொலை மற்றும் நில மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கொலை பற்றிய தகவல்களை போலீஸ் அதிகாரியே மறைக்க முயன்ற சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.