மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. அதில் சிறப்புரையாற்ற தமிழகத் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். வரவேற்புக் குழுத் தலைவரோ அமைச்சர் ஒருவரோ தலைவர்களைச் சந்தித்து அழைக்க வேண்டும் என முடிவாயிற்று. ஆனால் அண்ணா அதை ஏற்கவில்லை. மாறாகத் தானே நேரில் சென்று இராசாசி, பெரியார், காமராசர், சீவா உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார். அவரது அன்பான அழைப்பை ஏற்று, மாநாட்டிற்கு இந்தத் தலைவர்கள் வந்தபோது மாநாட்டின் முகப்பில் நின்று அனைவரையும் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றவர் அண்ணா.
- தினமணி வெளியிட்டுள்ள அண்ணா நூற்றாண்டு மலர் இதழில் பழ. நெடுமாறன்.
விதை நெல்லைச் சாப்பிடும் பசி எனக்கில்லை
1967ஆம் ஆண்டு முதல்வர் அண்ணா, செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அதில் ஒரு நிகழ்ச்சியாக, நான் கல்வி பயின்ற பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாலையில் உரையாற்றினார் அண்ணா.
அண்ணாவை வரவேற்றுப் பேசிய கல்லூரி முதல்வர் இராசநாயகம் அடிகளார், ‘எங்கள் கல்லூரியில் அறிவியல் பாடம் உண்டு, பொருளாதாரப் பாடம் உண்டு, அரசியல் பாடத்திற்கு மட்டும் இடம் இல்லை. நெல்லை சட்டப்பேரவை உறுப்பினரான ஏ. எல்.எசும் எட்மண்டும் எங்கள் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் என்பதால் பெருமைப்படுகிறேன்’ என்றார்.
பின்னர் பேசிய அண்ணா, தனது உரையில் ‘கல்லூரி முதல்வர் அடிகளார் அவர்கள் நான் இங்குள்ள மாணவர்களை அரசியலுக்கு அழைத்துச் சென்றுவிடுவேனோ என்று அச்சப்படுகிறார். அந்த அச்சம் தேவையில்லை. நான் மாணவர்களை விதை நெல்லாகக் கருதுபவன், விதையை விதைத்து அதனை நாற்றாக்கி நாற்றைப் பிடுங்கி வயலில் நட்டு அதிக விளைச்சல் பெற வேண்டுமென்று கருதுகின்ற அரசியல்வாதி நான். விதை நெல்லையே எடுத்துச் சமைத்து சாப்பிடுகின்ற அளவு எனக்கு அரசியலில் பசி கிடையாது.
- தினமணி வெளியிட்டுள்ள அண்ணா நூற்றாண்டு மலர் இதழில் அ.இல. சுப்பிரமணியன்
2 கருத்துக்கள்:
அண்ணாவின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் கூட்டம் விதை நெல்லை சாப்பிடும் பசியோடுதான் அழைகிறார்கள்...ஒன்றிரண்டு நெல் தப்பித்தாலும் போலி வழக்குகள், என்கவுண்டர்கள் என்ற பெயரில் அழிக்க தான் பார்கிறார்கள்...
அற்புதம் உங்களது கோணம். மாவீரர்கள் புதைக்கபடுவதில்லை, விதைக்கபடுகிறார்கள்.
Post a Comment