இன்றைய பதிவை ஒரு கதை வழியாகப் பார்ப்போமா? முன்னொரு காலத்தில் காசு, தியா என்னும் பெயருடைய இரண்டு நாடுகள் இருந்தன. இரண்டும் பக்கத்துப் பக்கத்து நாடுகள். இரண்டு நாடுகளுமே ஒரு கொடியவனிடம் அடிமையாக இருந்தன. அவற்றில் தியா நாடு இன்னொரு நாட்டை விட அளவிலும் மக்கள்தொகையிலும் பெரிய நாடு. காசு நாடு மிகவும் அழகான நாடு. அந்த இரு நாடுகளிலும் திடீரென மக்கள் புரட்சி ஏற்பட்டு அக்கொடியவன் நாட்டை விட்டே ஓடி விடுகிறான். பின்னர் தியா நாட்டு மக்கள் எல்லாம் ஒன்று கூடி நமக்கென ஒரு குடியரசு அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். அப்படியே குடியரசு அமைகிறது.
காசு நாட்டிலோ பழைய காலத்து மன்னராட்சி தொடர்கிறது. அந்நாட்டிலும் மக்களாட்சி வேண்டும் மன்னராட்சி ஒழிய வேண்டும் என்னும் கருத்து மக்களிடையே பரவி வருகிறது. அதற்காகச் சில தலைவர்கள் போராடி வருகிறார்கள். இதற்கிடையே தியா நாட்டிடம் இருந்து பிரிந்து போய் இருந்த சுதான் நாட்டின் உதவியுடன் பக்கத்தில் இருந்த சில மக்கள் சின்ன நாட்டின் மன்னன் அரி மீது படையெடுக்கிறார்கள். அரண்டு போன மன்னன் தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தியா நாட்டின் உதவியை நாடுகிறான். உடனடியாகத் தியா நாடு தன்னுடைய இராணுவத்தை அங்கு அனுப்பிப் போரிட்டு வெற்றி பெற்றுவிடுகிறது. இவ்வெற்றிக்குப் பின் தன்னுடைய இராணுவத்தை அங்கேயே நிறுவிக் காசு நாட்டைத் தன்வசப்படுத்திக்கொள்கிறது. மன்னனும் சில நாட்களில் ஓடிப் போய் விடுகிறான்.
காசு நாட்டு மக்களுக்கோ பெரிய குழப்பம் வந்து விடுகிறது. ‘என்னடா இது? மன்னராட்சி வேண்டாம் என்று மன்னனை விரட்ட நினைத்தோம். இப்போது மன்னன் ஓடிப்போய்விட்டான். ஆனால் அவனுக்கு மாற்றாக இராணுவம் அல்லவா வந்துவிட்டது! இப்படி நம்முடைய வாழ்க்கை ஆகிவிட்டதே! என்று அம்மக்களுக்கு ஒரே வருத்தம்! ‘நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம். உங்களுடைய இராணுவத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்று தியா நாட்டை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கிவிடுகிறார்கள். மன்னனுக்கு உதவுவது போல் உதவி மன்னனை விரட்டி விட்டால் அழகான காசு நாடு நமக்குக் கிடைத்து விடும் என்று கனவு கண்டுகொண்டிருந்த தியா நாட்டுக்கோ மக்கள் போராட்டம் புதிய தலைவலியாக அமைந்து விட்டது. யாருக்கும் தெரியாமல் இந்தச் சிக்கலை மூடி மறைத்து விடலாம் என்று முயன்று பார்த்தது. ஆனால் தியா நாட்டின் நிலையை அறிந்த பிற நாடுகள் எல்லாம் திரண்டு வந்து விட்டன.
உடனடியாகப் பெரிய நாடு அமுக்கமாக ஒரு திட்டம் தீட்டியது. ‘நாங்கள் ஒன்றும் காசு நாட்டைக் கைப்பற்றவில்லை. அந்த நாடு எங்களுக்குத் தேவையும் இல்லை! அந்நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கவிரும்புகிறார்களா? தனி நாடாக இருக்க விரும்புகிறார்களா? இல்லை வேறு நாட்டுடன் போக விரும்புகிறார்களா? என்று நாங்கள் வாக்கெடுப்பு நடத்துவோம்’ என்று உலக நாடுகளிடம் கூறியது. பிற நாடுகளும் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டன. ஆனால் அதைச் செய்தால் எங்கே அழகான காசு நாடு நம்மை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டு தியா நாடு இன்று வரை அதைச் செய்யவே இல்லை. வாக்கெடுப்பு நடத்தாதது மட்டுமில்லை – காசு நாடு தனி நாடு இல்லை. அது எங்களுடைய ஒரு பகுதி என்று உரிமை வேறு கொண்டாடத் தொடங்கிவிட்டது.
நீங்களே சொல்லுங்கள்! தியா நாடு செய்வது சரியா? காசு நாடு யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தாமே முடிவு செய்ய வேண்டும்.
இது கதையில்லை உண்மை! ஆமாம்! இக்கதையில் வரும் காசு நாடுதான் காசுமீர்! தியா நாடுதான் இந்தியா! அந்த மன்னர் தான் அரிசிங்கு! 1948 ஆம் ஆண்டு சனவரி ஒன்றாம் நாள் இச்சிக்கலைப் பன்னாட்டு அவைக்குக் கொண்டு சென்ற இந்திய அரசு வாக்கெடுப்பு நடத்திக் காசுமீர்ச் சிக்கலைத் தீர்ப்பதாகச் சொன்னது. ஆனால் இன்று வரை அதைச் செய்யவே இல்லை! இது மட்டுமில்லை! அம்மக்கள் தாம் அச்சிக்கலுக்குத் தீர்வு தர வேண்டும் என்று சொன்ன காசுமீர் தலைவர் சேக் அப்துல்லாவையும் ஏறத்தாழ பதினோர் ஆண்டுகள் இந்திய அரசு சிறையில் அடைத்து விட்டது.
இந்தியாவின் இச்சூழ்ச்சியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் பாகிசுதானும் காசுமீர் தனக்கே என்று கூறிவருகிறது. இப்படி இந்தியாவின் ஆதிக்க வெறியாலும் பாகிசுதானின் ஆதிக்க வெறியாலும் பாழாகிப் போனது காசுமீர் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கைதான்! ஒவ்வொரு நாளும் வீட்டு முன்னர் இராணுவத்தினர் துப்பாக்கியுடன் இருப்பதைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
கிழக்குப் பாகிசுதானில் இருந்த மக்கள் பாகிசுதானில் இருந்து பிரிய விரும்பினார்கள். அப்போது மனமுவந்து சென்று அம்மக்கள் போராட்டத்தில் இருந்த நியாயத்தை மதித்து வங்காளத் தேசமாகப் பிரித்துக் கொடுத்த இந்தியா, காசுமீரிலும் அம்மக்களை மதித்திருக்க வேண்டாமா? வங்காளத் தேச நாட்டு மக்களுக்கு ஒரு நீதி! காசுமீர் மக்களுக்கு ஒரு நீதியா?
0 கருத்துக்கள்:
Post a Comment