சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்... ராமர் அங்குதான் பிறந்தார் அதனால் இந்துக்களுக்கு சொந்தம் என்று ஒரு கூட்டம் கூறுகிறது. மற்றொரு பக்கம் பாபர் மசூதி இருந்த இடம் என்பதால் இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஒன்றை மட்டும் இரு கூட்டமுமே மறந்துவிட்டது. கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பவர்களிடம் கேட்கும் ஒரே ஒரு கேள்வி. மனிதனை படைத்த கடவுளுக்கு கூட மனிதனால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு சொல்ல வேண்டுமா ?
அதையே சரி என்று வைத்து கொள்வோம். கடவுள் என்பவர் மனிதனாக அவதாரம் எடுத்தது எதற்கு ? (எந்த மதமாக இருந்தாலும் சரி ) நன்மைகளை படைக்கதானே ? உடனே இந்த கட்டுரையை எழுதுபவன் நாத்திகவாதி என முத்திரை குத்துவார்கள். ஆனால் என் விஷயத்தில் அது எடுபடாது ஏனெனில் தினமும் கடவுளை கும்பிட்டுவிட்டுதான் எனது பணிகளை தொடர்கிறேன். நான் கடவுளை நம்புகிறேன். அதற்காக நான் பின்பற்றும் மதம்தான் சிறந்தது என ஒரு போதும் கூச்சல் இட மாட்டேன். எனக்கு தோன்றிய எண்ணம் பலருக்கு தோன்றலாம். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மதவாதிகள் மக்களை துண்டாடுகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம். அதெல்லாம் சரி இந்த வழக்கை கடந்த 1961ம் ஆண்டு தொடுத்த ஹசீம் அன்சாரி என்ன சொல்கிறார் தெரியுமா ? மசூதியை விட நாடே முக்கியம் என்கிறார். அதுமட்டுமல்ல கடைசியாக அவர் மசூதிக்கு சென்ற நாளை நினைவு கூர்கிறார். 1949ம் ஆண்டு டிசம்பரில் பாபர் மசூதிக்கு சென்றதாகவும், அன்று இரவு ராம்தாஸ் என்னும் உள்ளூர் சாது ஒருவர் மசூதியின் உள்ளே சென்று ராமர் சிலையை வைத்ததாகவும் கூறுகிறார். அதன்பிறகுதான் மதத்தால் மக்களிடையே பிளவு ஏற்படகூடாது என்ற எண்ணத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் என பழைய நினைவுகளை அவர் அசைபோடுகிறார். அதுவும் ராமர் சிலை மசூதிக்குள் வைக்கப்பட்டவுடனே வழக்கு தொடரவில்லை என்றும், 12 ஆண்டுகள் கழித்து நன்மை பிறக்கும் என்ற எண்ணத்தில் வழக்கு தொடர்ந்தேன் என கூறுகிறார். அதற்காக தாம் இந்துக்களை வெறுக்கவில்லை என்றும், இப்போதும் தமக்கு பல இந்து குருமார்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதை ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறார் ஹசீம். ராமரா ? பாபரா ? என மக்களுக்குள் பிளவு வரும் என தெரிந்திருந்தால் இப்பிரச்சினையை வேறுவிதமாக கையாண்டு இருப்பேன் என்று கூறும் அவர், அதோடு மட்டுமின்றி அயோத்தி நில வழக்கு பிரச்சினை இத்தோடு முடிய வேண்டும் என தாம் வணங்கும் அல்லாவிடம் பிராத்தனை செய்வதாக கூறுகிறார். தீர்ப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இதைவைத்து அரசியல் செய்யாதீர் என்ற அவரது வாதத்தில் நியாயம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இப்போது சொல்லுங்கள் இப்படி சகோதரதுவத்துடன் பழக நினைக்கும் நண்பனை மதத்தின் பெயரில் எதிரியாக மாற்ற வேண்டுமா ? நான் மேலே ஹசீம் அன்சாரி குறிப்பிட்டதாக எழுதியுள்ள அனைத்தும் அவுட் லுக் என்ற ஆங்கில இதழில் அவர் அளித்த பேட்டியில் கூறியதுதான். இதை உங்களிடம் ஏன் கூறுகிறேன் என்றால் மனிதனை மேம்படுத்தவே மதம் என்பதை முழுமையாக நம்புங்கள். வழக்கை தொடர்ந்தவரே தவறை எண்ணி வருந்தும்போது, கண்ணில் நேரில் பார்க்காத ஒரு விஷயத்திற்காக நாம் சண்டை போட வேண்டுமா ? இதனை அரசியல் லாபத்தோடு உற்று நோக்கும் அரசியல்வாதிகளுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா ? ஒரு வேளை ராமரும், பாபரும் வேற்று உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்கள் நமது இயலாமையை நினைத்து வருந்துவார்களே ஒழிய, அவர்களுக்குள் சண்டை போட மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். அது எப்படி சாத்தியம் என உங்களுக்குள் ஐயம் எழும். அதற்கு பதில் அவர்கள் கடவுள், மனிதர்கள் அல்ல. நேரத்தை வீணடிக்க...
3 கருத்துக்கள்:
ஜி ! உங்கள் பதிவுக்கு முதலில் என்னுடைய வாழ்துக்கள் . . .
நீங்க சொன்ன கருதுக்களை நானும் நம்புறேன் ! இவங்க முடிவு சொல்லாமல் இருந்தாலே மக்கள் நிம்மதியா இருப்பாங்க ......
@shanmuga raman
நன்றி
Post a Comment