Sep 24, 2010

அயோத்தியும் ,சட்டமும் ஓர் அலசல்


பாபர் மசூதி கடந்த1528ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் வரை தொடர்ச்சியாக முஸ்லீம்கள் வழிபாடு நடத்தக் கூடிய ஒரு தொழுகை இடமாக இருக்கிறது.  வருவாய்த் துறை ஆவணங்களின்படி அது உத்தரப்பிரதேச சன்னி ஜமாத்து வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்தத் டிசம்பர் 22ஆம் நாள் முஸ்லீம்கள் தொழுதுவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு நள்ளிரவில் சிலர் புகுந்து இராமன், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோரின் சிலைகளைப் பள்ளிவாசலின் தொழுகைத் தலைவர் (இமாம்) மக்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய மேடையில் வைத்து விட்டு இராமபெருமான் தம்முடைய ஜென்ம பூமியில் அவதாரம் எடுத்துவிட்டார்என்று சொன்னார்கள்.


  அப்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.  இந்தச் சிலைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அன்றைய பிரதமர்  ஜவஹர்லால்நேரு உத்தரவிடுகிறார்.  ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. கே. நையர், ‘சிலைகளை அப்புறப்படுத்தினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்என்கிறார். 

இத்தனைக்கும் அயோத்தியின் காங்கிரசுக் கட்சித் தலைவர் அகசாய பிரம்மச்சாரி இந்தச் சிலைகளை அப்புறப்படுத்தி இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும்என்று ஒரு தர்ணா போராட்டம் நடத்தினார்.  ஆனால் மாவட்ட ஆட்சியருடைய உத்தரவுக்கு ஏற்ப மசூதி பூட்டப்படுகிறது; பூட்டிய நிலையில் உள்ளே இருக்கக்கூடிய சிலைகளைப் பூஜிப்பதற்கு இரண்டு பூசாரிகள் உள்ளே செல்லலாம் என்பதும் முஸ்லீம்கள் அருகில் செல்லக்கூடாது என்பதும் நீதிமன்றத்தின் உத்தரவு.  இந்நிலையில் வழக்கு கீழ்நீதிமன்றத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் போய் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவுக்குப் போகிறது.  அங்கே வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் உமேஷ் சந்திரபாண்டே என்னும் வழக்கறிஞர் முனிசிபல் நீதிமன்றத்திற்குப் போய்த் தான் ஒரு இராம பக்தன் என்றும் வழிபாடு நடத்தத் தனக்கு ஒப்புதல் வேண்டும் என்றும் சொல்ல, வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கும்போது தீர்ப்பு வழங்க முடியாது என்று முனிசீபல் நீதிமன்றம் நீதிபதி கூறுகிறார்.  அதன் பிறகு அவர் மாவட்ட நீதிமன்றத்தை அணுகுகிறார். வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நேரத்தில் மாவட்ட நீதிபதி கொஞ்சநேரம் விசாரிக்கிறார். 
            எதிர்த் தரப்பு விசாரணைக்காக வருகிறார்கள்.  அவர்களுடைய வாதத்தைக் கேட்பதற்குக் கூட மறுத்துவிட்டு பள்ளிவாசல் பூட்டை உடைத்துப் ராம பக்தர்கள் உள்ளே செல்லலாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிடுகிறார்.  இலக்னோ தூர்தர்ஷனில் இருந்து அதைப் படம் எடுத்து இந்தியா முழுவதும் அதைக் காட்டுகிறார்கள். அது அரசியலுக்காகச் செய்யப்பட்ட ஒரு வேலை.  இப்படிப்பட்ட சூழலில்தான் சோமநாதபுரத்தில் இருந்து அயோத்தி நோக்கிய அத்வானியின் ரத யாத்திரை பீகாருக்கு வரும்போது பீகாரின் அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அதைத் தடுத்து நிறுத்துகிறார்.  1989ஆம் ஆண்டில் பாகல்பூரில் நடைபெற்ற மிகப்பெரிய படுகொலைகள் ஆகியன இந்தியாவை வகுப்புவாத அடிப்படையில் கொதிப்படைய வைத்த சூழ்நிலைகளாக அமைந்தன.  மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வி.பி. சிங்கின் அரசு கவிழ்க்கப்பட்ட நிகழ்வு முதலியன இந்தக் காலத்தில் தான் நடக்கிறது.  இதனுடைய உச்சக் கட்டமாக 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்படக் கூடிய சூழலைப் பார்க்கிறோம்.  இதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு டிசம்பர், 1993ஆம் ஆண்டு  ஜனவரி ஆகிய காலங்களில் மும்பையில் கலவரங்கள் நடக்கின்றன.  இது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அந்த விசாரணை ஆணையம், பால் தாக்கரே ஓர் இராணுவத் தளபதி போல இக்கலவரங்களுக்குத் தலைமையேற்று நடத்தினார் என்று சொன்ன பிறகும் கூட எந்த வித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படாத நிலை.
 இதுவரை நாம் பார்த்தது வரலாறு, இனிமேல் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சட்டம், இந்திய சட்டப்படி சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட எந்த மதத்தின் வழிப்பாட்டுதலத்தையும் இடிக்க கூடாது. எனவே நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 கருத்துக்கள்:

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text