Sep 28, 2010

காமன்வெல்த் போட்டி - ஒரு பார்வை


காமன் வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதால் பயன் என்ன ? இதனால் இந்திய வீரர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன் கிடைக்க போகிறதா ? இப்படி எண்ணற்ற கேள்விகள் நமக்கு எழுவது இயற்கையே, ஆனால் அடிமையின் மறுபிறப்பான பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சியில் இதை பற்றி காங்கிரஸ் தலைவர்களே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.


என்ன உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? நாம் சொல்வது எல்லாம் உண்மையே, மன்மோகன் சிங்கை நேரடியாக எதிர்க்க முடியாத மணி சங்கர் ஐயர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கருத்தினை கூறுகிறார் அது என்ன என்பதை இப்போது பார்ப்போம். காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா லஞ்சம் கொடுத்தது என்றார். எதற்காக என கேள்வி எழுவது சகஜமே. இந்த போட்டியை நடத்த அனுமதி பெறுவதற்காக பல கோடி ரூபாய் வரை பல நாட்டு விளையாட்டு சங்கங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற உண்மையை போட்டு உடைத்தார் மணி சங்கர் அய்யர். என்னடா பழைய கதையை சொல்லி மொக்கை பண்ணுகிறாரே என்று எண்ண வேண்டாம்.

இந்த கருத்தினை சொன்ன மணிசங்கர் அய்யர் முன்னாள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதோடு அவர் விடவில்லை. இப்படி போட்டிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழிப்பதை விட, சிறந்த வீரர்களை கண்டெடுத்து அவர்களுக்கு அரசின் சார்பில் பயிற்சி அளிக்கலாமே ? என்ற அவரது ஆதங்கம் நியாயமானதே. இன்றும் நமது நாட்டில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர்.

ஆனால் பொருளாதார நிலைமை அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவில்லை என்பதை விளையாட்டுத்துறை வல்லுனர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இதோடு விட்டதா காமன் வெல்த் பிரச்சினை... போட்டிகள் நடத்தும் அரங்குகளை அமைப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என தேசிய சேனல்கள் கூவி கூவி செய்தி வெளியிடுகின்றன.

இதற்கு முத்தாய்ப்பாய் காமன்வெல்த் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட நடை மேம்பாலம் இடிந்து விழுந்து இந்தியாவின் மானத்தை காற்றில் பறக்கவிட்டது.

அது கூட பரவாயில்லை. காமன்வெல்த் போட்டிகளின் டெல்லி சாலைகளில் பேருந்துகள் ஒடினால் இந்தியாவின் மானம் பறிபோய்விடுமாம். அதனால் புதிய பேருந்துகள் மற்றும் ஏசி பேருந்துகளை மட்டுமே டெல்லி சாலைகளில் இயக்கும்படி அம்மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார். இதனால் பேருந்துகளில் பயணம் செய்யும் நடுத்தர வர்க்கத்தினர் அலுவலகங்களுக்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பணக்காரர்கள் காரில் செல்ல டெல்லி சாலைகளில் அனுமதி உண்டு. ஆனால் பேருந்தில் செல்லும் மக்களுக்கு மறுப்பு.

இது எந்தவிதத்தில் நியாயம்... இப்படி எண்ணற்ற கேள்விகளோடு நாம் சிந்தித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ,காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் பெருமை குறித்து கவலைப்படவில்லை என்று காமன்வெல்த் போட்டி தலைமை நிர்வாகி மைக் ஹூப்பர் விமர்சனம் செய்துள்ளார். நியூசிலாந்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், காமன்வெல்த் போட்டி நடைபெறும் டெல்லியில் போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் தொகையே காரணம் என குற்றம்சாட்டினார்.

இப்படி தன் மானத்தை விட்டு ஒரு போட்டியை நாம் நடத்திதான் ஆக வேண்டுமா? நடந்தவைகளை மறப்போம். நடப்பவைகள் நல்லவைகளா மாற வேண்டும் என்ற உணர்வோடு.... வருங்காலத்தில் இதுபோன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தாமல் பல வீரர்களை உருவாக்க முயலுவோம். இப்படி கூறிய மணிசங்கரின் கனவை நனவாக்குமா மத்திய அரசு. பொறுத்திருந்து பார்ப்போம்.



1 கருத்துக்கள்:

Anonymous said...

And then

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text