காட்சி 1:
‘மன்னன்’ என்றொரு தமிழ்ப்படம்! தமிழகத்தின் முன்னணி நடிகர் நடித்த படம் அது! கூலித் தொழிலாளியாகத் தொடக்கத்தில் வரும் நடிகர், பின்னர் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையின் முதலாளியின் மகளை மணப்பதன் மூலம் முதலாளியாகவும் ஆகிவிடுவார். கூலித் தொழிலாளியாக இருக்கும்போது இயல்பாக இருக்கும் அவர், முதலாளியான உடன் பெரும்
பணக்காரர்கள் நடுவில் திடீரென ஆங்கிலத்தில் உரையாடுவார். இப்படி ஒரு காட்சி அப்படத்தில் வரும்போது திரையரங்கில் உள்ள இரசிகர்கள் எல்லாரும் கை தட்டி ஆரவாரிப்பர். ‘ஆகா! நம்முடைய தலைவன் பெரும்பணக்காரர்களுக்கு நிகராக ஆங்கிலத்தில் உரையாடுகிறாரே!’ என்னும் உள்ளுணர்வின் வெளிப்பாடு அது!
பணக்காரர்கள் நடுவில் திடீரென ஆங்கிலத்தில் உரையாடுவார். இப்படி ஒரு காட்சி அப்படத்தில் வரும்போது திரையரங்கில் உள்ள இரசிகர்கள் எல்லாரும் கை தட்டி ஆரவாரிப்பர். ‘ஆகா! நம்முடைய தலைவன் பெரும்பணக்காரர்களுக்கு நிகராக ஆங்கிலத்தில் உரையாடுகிறாரே!’ என்னும் உள்ளுணர்வின் வெளிப்பாடு அது!
காட்சி 2:
மேலே குறிப்பிட்டுள்ள அதே நடிகர் நடித்த இன்னொரு படம் ‘படிக்காதவன்’ இதிலும் இவர் தொழிலாளி தாம்! கடுமையாக உழைத்து தம்பியைக் காப்பாற்றுவார். ஒருமுறை தம்பி நடிக்கும் நாடகத்தைப் பார்க்கப் போவார். அப்போது பக்கத்தில் இருக்கும் ஆங்கிலப் பெண் ஒருத்தி ‘மணி என்ன?’ என்று ஆங்கிலத்தில் கேட்பாள்; இவருக்கோ ஆங்கிலம் தெரியாது. ஆனால் தெரிந்தது போல் ‘தாங்கி யூ’ என்று தொடர்பே இல்லாமல் விடை சொல்வார். இரசிகர்கள் இதைக் கேட்டுச் சிரிப்பார்கள்.
இந்த இரண்டு காட்சிகளின் வழியாக நமக்குத் தெரிய வரும் உண்மை என்ன?
1) ஆங்கிலம் பணக்காரர்களின் மொழி; பண்பட்ட மொழி.
2) அதைத் தவறாகப் பேசுவது சிரிப்புக்குரியது.
இப்படிச் சொல்லிக் கொடுத்ததன் விளைவு, நம்மூர்க்காரர்கள் யாராவது ஆங்கிலத்தைத் தவறாகப் பேசினால் அந்த இடத்திலேயே பல பேர் முன் அவரைப் பார்த்துச் சிரித்து, பேசியவரை ஏளனப்படுத்தி விடுவது - இல்லை எனில் அவர் போன பின் வீட்டில் இருப்போரிடம் அவர் பேசியதைச் சொல்லிச் சிரிப்பது என நாமும் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் ‘உங்களுடைய தாய்மொழி என்ன?’ என்று கேட்டால் ‘தமில்’ என்று சொல்லிக் கொண்டிருப்போம். இது சரியா?
ஆங்கிலம் என்பது ஒரு வெளிநாட்டு மொழியாகும். அதை எந்த வெளிநாட்டு ஆளும் வந்து நமக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை; நாமும் வெளிநாட்டில் இல்லை. இந்த ஊரிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்து படித்த ஒருவர் தாம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார். அதை நமக்குப் புரிந்து கொண்ட அளவிலோ தெரிந்த அளவிலோ மட்டும் பேசுவதில் என்ன தவறு? தாய்மொழி இல்லாத இன்னொரு மொழியைப் படிக்கும் போது தவறு வருவது இயல்பு; ஆனால் இதை எல்லாம் மறந்து ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் முட்டாள்கள் என்பது போலவும் பண்பாடு இல்லாதவர்கள் போலவும் நினைப்பது சரியா? நம்முடைய தாய்மொழியைத் தவறாகப் பேசிக் கொண்டிருப்போம்! (‘என் குலந்தைக்கு டமில் வராது!’ எனச் சில வேளைகளில் பெருமையாகச் சொல்வோரும் உண்டு) ஆனால் அதைப் பற்றிக் கவலையே பட மாட்டோம் என்பது சரியா? சிந்திப்போமே!
1 கருத்துக்கள்:
நல்ல செய்தி. எனக்கும் எழுத்து பிழைகள் வருவதுண்டு.திருத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் சில விஷயங்கள் நெருடலாக உள்ளது.. “முடிவு உங்கள் கையில்,பிரதமர் ம(ண்)மோகனின் தேசிய கவலை,அதோத்தியும் சட்டமும் ஓர் அலசல்” என சில பதிவுகளின் தலைப்பே தமிழில் உள்ளது..! “காவல்துறையின் காட்டாட்சி-பதற வைக்கும் வீடியோ காட்சி, அயோத்தி தீர்ப்பு-காமெடி க்ளைமாக்ஸ்” - வாசகர்களை பரபரப்பிற்கு உள்ளாக்குவதும்,பதற வைப்பதும் மட்டுமே நோக்கமாக கொண்டு வைத்த பெயர் போல் உள்ளது! மற்றப்படி அதில் தமிழ் இல்லை...நீங்கள் சொல்வது போல் ”டமிலில் நன்றாக எலுதுகிரீர்கல்”
Post a Comment