குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்த போது இடதுசாரிகள் பொங்கி எழுந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அப்போது அவர்கள் சொன்ன காரணம் ஒரு கொடூர கொலைகாரனைத் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்றனர். மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால் அப்பாவி ஈழத்தமிழர்களைக் கொத்து கொத்தாகக் கொன்று குவித்த இராஜபக்சே இந்தியா வரும்போது இடதுசாரிகள் மவுனம் சாதிப்பது ஏன் ?
பதில் கூறுவார்களா தோழர்கள் ? விடுதலைப் புலிகள் இயக்கம் மீது மாறுபட்ட கருத்து இருக்கலாம், அதற்காகத் தமிழர்களைப் பகடைக்காய்களாகப் பார்க்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கு என்ன வித்தியாசம் உள்ளது. ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவிக்கக் கோரி ஐ.நா. சபையில் நார்வே நாடு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தது. அப்போது இடதுசாரி கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் ரஷ்யா, கியூபா, சீனா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக களமிறங்கின. இது எந்தவிதத்தில் நியாயம்? இவர்களோடு வழக்கம்போல் இரட்டை வேடம் போடும் இந்தியாவும் கைகோர்த்து நின்றது பச்ச தமிழனின் மனதில் ஆணியை வைத்து குத்தியது போல் இருந்தது.
இதுபரவாயில்லை, பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் செய்தியாளரை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் சொன்ன செய்தி மனதை புண்பட செய்தது. அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி எழுதியதால் விசா வழங்க இலங்கை அரசு மறுத்துள்ளது. அது கூட பரவாயில்லை. ராஜ பக்சேவின் கோரமுகம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இலங்கையில் இடது சாரிகள் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள் ராஜபக்சேவின் செயலை வாரி வரிந்து கொண்டு ஆதரிக்கின்றன என்று அவர் வருத்தமான குரலில் சொன்னார். இந்தக் கட்சிகள் நடத்திய மாநாட்டிற்கு இடது சாரிகளின் தலைவர் ஒருவர் தமிழகத்தில் இருந்து சென்று வந்தார். இதனை எப்படி மனசாட்சியுள்ள தோழர்கள் ஏற்று கொண்டனர் என்பதுதான் மனத்தில் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தோழரின் பெயரை குறிப்பிட்டு எழுதலாம் என்றுதான் நினைத்தேன். இருப்பினும் இடதுசாரிகள் மீது இருக்கும் கடைசி கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை.
நடந்தவைகளை மறப்போம். நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும். காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள ராஜபக்சே இந்தியாவிற்கு வரவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. அப்போதாவது, தங்களது மனசாட்சிக்குத் தோழர்கள் இடம் கொடுப்பார்களா என்ற ஏக்கத்துடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். கொடூர கொலைகாரன் ராஜபக்சேவின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைவோம். இலங்கையில் 18 அம்ச கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து புதிய ஹிட்லராக உருவாகி வரும் ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை அனைவரும் எண்ணிப் பார்ப்போம். இப்போது புரிகிறதா இடது சாரிகளின் கொள்கைகள் ஏன் ஏட்டளவில் மட்டும் உள்ளது என்று, அதற்காக இடதுசாரிகள் கொள்கை தவறு என்று யாரும் எண்ண வேண்டாம். அவர்களின் கொள்கை நாட்டிற்கு தேவையான ஒன்றுதான், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் உள்ளது. இந்த நிலை மாற இனியாவது தோள் கொடுப்பார்களா தோழர்கள்?