Aug 31, 2010

பென்சிலின் விலை சிறுவனின் உயிர்

அண்ண ஒரு கூல் டிரிங்ஸ் கொடுங்க... என கடைக்காரரிடம் உரிமையோடு கேட்கிறான் 14 வயது சுபாஷ், அப்போது அவனது கண்ணில் பட்டது அழகான கலர் பென்சில், உடனே ஆர்வ கோளாறில் பென்சிலை எடுத்து பைக்குள் வைத்துள்ளான். இதனை கவனித்த கடைக்காரர் பையன் பென்சிலை திருடி விட்டதாக நினைத்து தனது சக நண்பர்களுடன் சேர்ந்து அடித்துள்ளார். அப்போது வலி தாங்காமல் துடிக்கும் சிறுவனை அவர்கள் தாறுமாறாக அடித்து உதைத்துள்ளனர். மேலும் சிறுவனுக்கு உடம்பில் சூடு வைத்துள்ளனர்.  பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுவன் அவமானம் தாங்கமுடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இதனையறிந்த பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கடைக்காரருக்கு எதிராக புகார் கொடுக்கின்றனர். அப்போது அந்த கடைக்காரர் உயர் போலீஸ் அதிகாரிக்கு வேண்டபட்டவர் என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். இந்த தகவல் பத்திரிக்கைகளுக்கு கசிய  புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கண்துடைப்பிற்காக 3 பேரை கைது செய்துள்ளனர். இது நடந்தது கல்வியறிவு குறைவாக உள்ள ஜார்கண்ட் மாநிலத்திலோ அல்லது பீகாரிலோ அல்ல, சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில்தான். போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து கேட்டால், பெற்றோரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். உண்மை நிலைமை எங்களுக்கு இன்னமும் தெரியாது என மழுப்புலான பதிலை கூறுகின்றனர். ஆனால் மனித உரிமை ஆர்வலர்களோ, வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் முதலில் இழுத்தடித்தது தவறு என குற்றம் சாட்டுகின்றனர். பென்சிலின் விலை சிறுவனின் உயிர் என்றால், கேட்கவே பரிதாபமாக இருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை, நாம், உள்ளூரில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான குரல் கொடுத்தால்தான் நமது அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் திருந்துவார்கள் என்பதை அனைவரும் மனதில் உறுதி மொழியாக ஏற்க வேண்டும். அதிகாரிகளின் பழக்கம் இருக்கிறது என்கிற தைரியத்தில் எதையும் செய்யலாம் எண்ணம் வளருவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலுக்கு சமம் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழ வேண்டும்.

Aug 27, 2010

தேர்தல் முன்னோட்டம் - விஜயகாந்தின் மன கணக்கு


அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா... விஜயகாந்துடன் கூட்டணி வைக்க தயக்கமில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்லி 2 வாரம் ஆகவில்லை. விஜயகாந்தின் 58வது பிறந்தநாள் விழாவுக்கு நேரில் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயகாந்த் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்வார்ன்னு புகழாராரம் சூட்டினார். இப்படி நாளுக்கு நாள் விஜயகாந்த் புராணம் படி வருகின்றனர் தமிழகத்து அரசியல் தலைவர்கள்...
எது எப்படியோ விஜயகாந்தை சீண்டி அவரை தனியா தேர்தல் நிற்க வைக்க முயற்சி எடுத்திட்டிருக்கார் முதல்வர் கருணாநிதி. விஜயகாந்த் நடிக்கும் படங்களில் அவர் நிறைய கறுப்பு பணத்தை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறதுன்னு சொல்லி தன் பங்கை நிறைவு செய்துள்ளார் கருணாநிதி. இப்படி பேசுவதன் மூலம் திமுகவுக்கு எதிராக உள்ள வாக்காளர்களை இரண்டாக பிரிக்கலாம் கனவு காண்கிறார் கருணாநிதி. அது எப்படி சாத்தியம் யோசிக்கீறிங்களா ?
ஒன்று தமிழக பிரதான எதிர்கட்சியான அதிமுகவும், தேமுதிகவும் தனித்தனியாக தேர்தலில் நின்னா ? எதிர்கட்சியினர் வாக்குகள் சிதறும்.. அப்புறம் வழக்கம்போல் வாக்காளர்களுக்கு பணத்தாசை காட்டி தேர்தலில் ஜெயித்து விடலாம் திமுக திட்டம் போட வாய்ப்பு இருக்கு. அப்படி இல்ல 2 கட்சிகளும் கூட்டணி அமைத்துவிட்டால், ஊழல் கட்சியுடன் விஜயகாந்த் கூட்டணி வைச்சுருக்காருன்னு தேர்தல் பிரச்சாரத்தில் மேடைக்கு மேடை பேசலாம்கிறது திமுக கணிப்பா இருக்கலாம்.
ஆனா ஒன்னு நிஜம்ங்க. தேமுதிக இந்த தடவை தனியா நின்னா வேட்பாளர்களே விலை போயிடுவாங்க. ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிச்சப்ப வந்த கூட்டத்தை பார்த்து அவருதான் அடுத்த முதல்வருன்னு பத்திரிக்கைகள் எல்லாம் செய்தி வெளியிட்டன. கடைசியில் அவரது கட்சி வெறும் 20 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிஞ்சுச்சு...
இதெல்லாம் விஜயகாந்த் கவனமா கருத்தில் எடுத்துகிடனும்கிறது அரசியல் விமர்சகர்களின் கருத்தா இருக்கு.
திண்டிவனத்தில் கட்சி நிர்வாகிகள் திருமணத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், எம்.ஜி.ஆருக்கு அப்புறம் ஆட்சிக்கு வந்தவுங்க எல்லாம் மக்களை ஏமாத்திட்டு இருக்காங்னு பஞ்ச் டயலாக் பேசி மக்களின் மனதை கவர்ந்தார்.கூட்டணி இல்லைன்னு களப்பணியாற்றும் தொண்டர்கள் சோர்ந்து போயீடுவாங்க்கிறத அறிந்துள்ள அவர், மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் சொல்லி இருக்காரு. ஒன்னு அதிமுக கூட கூட்டணி, இல்லைன்னா காங்கிரஸ், பா.ம.க. மற்றும் சிறு கட்சிகளுடன் சேர்ந்து 3 வது அணி அமைக்கலாம். இந்த கூட்டணி தமிழ்நாட்டில் 90 சீட் வரைக்கும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கு.இப்படி ஒரு ரிசல்ட் வந்தா கண்டிப்பாக தமிழகத்தில் கூட்டணிஆட்சிதான் அப்ப விஜயகாந்த் திட்டப்படி தேமுதிக அமைச்சரவையில் பங்கு கேட்க வாய்ப்பு இருக்கு. மொத்தத்தில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செஞ்சுட்டாங்க.

அதைதான் விஜயகாந்த் மறைமுகமாக வரும் தேர்தலில் மக்கள் விரும்பு நல்ல கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன்னு திண்டிவனம் கூட்டத்தில் முழங்கி இருக்காருன்னு அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 'எக்காரணம் கொண்டும் இனி தி.மு.க. ஆட்சிக்கு வராது.நாம் தனியாக ஆட்சி அமைக்கமுடியாதா? நான் இருக்கிறேன். உங்களை நான் கைவிடமாட்டேன். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.
10 எம்.எல்.ஏ., 10 எம்.பி.க்களாக நான் கட்சி நடத்த வில்லை. ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன். 2 கட்சிகளும் ஊழல் செய்துள்ளது. தே.மு.தி.க.வுடன் ஆட்சியை ஒப்படைத்து பாருங்கள் நல்ல ஆட்சியை தருவேன்' என்ற விஜயகாந்தின் வீர ஆவேசம் அவர் அமைக்கும் கூட்டணியை பொறுத்தே... சரி பொறுத்திருந்து பார்ப்போம்.

காவல்துறையின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ?


அரசு பணி கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை போலீசார் முரட்டுத்தனமாக தாக்கி உள்ளனர். காவல்துறையின் இந்த இரக்கமற்ற நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கழுத்தில் வெற்றி பதக்கமும், கண்களில் ஏமாற்றமுமாக சோர்ந்து காணப்படும் இவர்கள் அனைவரும் மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள். அரசு பணி கோரி சென்னை அண்ணா சதுக்கம் அருகே நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்ட இவர்களை தாக்கிய போலீசார்,  சக்கர நாற்காலி, ஊன்றுகோல் போன்றவற்றையும் பறித்துள்ளனர்.கொட்டும் மழையில் இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நிலை மோசமடைந்த அவர்களில் சிலர், 108 ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து அனைவருக்கும் அறிவுரை கூறும் அரசு, காவல்துறையினரின் இந்த கருணையற்ற செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது? இந்த செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதை பார்த்த முதல்வரின் மகள் கனிமொழி, தாம் நேரடியாக அவர்களிடம் குறை கேட்டதை ஏன் அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள், அந்த தொலைக்காட்சிக்கு தகவல் கொடுக்கப்படவில்லை என்பதை எப்படி கனிமொழியிடம் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றுள்ளனர். பின்னர் அந்த டிவியின் செய்தியாளர்களை தொடர்பு கொண்டு கனிமொழியின் கனிவான பார்வையை தயவு செய்து ஒளிபரப்புங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதெல்லாம் சரிதாங்க... சட்டபேரவை நிகழ்ச்சிகள் மற்றும் முதல்வரின் அறிவிப்புகள் போன்றவற்றை கலைஞர் டிவிக்கும், சன் டிவிக்கும் மட்டும் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள அதிகாரிகள் உண்மை உரைக்கல்லாக விளங்கும் மற்ற செய்தி நிறுவனங்களை இதுபோல் எப்போது மதிக்க வேண்டும் என்பதே பத்திரிக்கையாளர்களின் விருப்பம், அட இது ஒரு பக்கம் இருக்கட்டும். மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக குரல் கொடுக்கும் கருணாநிதியின் கீழுள்ள காவல்துறையே காட்டு மிராண்டி தனமாக நடந்துள்ளனரே ? அவர்கள் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன் ? பதில் கூறுவாரா தமிழின தலைவர் கலைஞர் ?

Aug 25, 2010

பேப்பர் படிக்காத அமைச்சர் !


சென்னை பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை வைக்க வேண்டும் என காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது வழக்கமான பாணியில் திமுகவினரை சகட்டு மேனிக்கு விளாசி தள்ளினார். 'காங்கிரஸ்காரன் ஆட்சியில பங்கு கேட்டதான் தர மாட்டீங்க... எங்க தலைவரை பெயரை பொது மருத்துவமனைக்கு வைச்சா குறைஞ்சா போயிருவீங்க' என்று உரிமையுடன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அந்த கூட்டத்துல அவர் திமுகவை விமர்சித்த ஒவ்வொரு வார்த்தைக்கும் பயங்கர வரவேற்பு... அட இது ஒரு புறம் இருக்கட்டுங்க... இப்ப கதைக்கு வருவோம்... காங்கிரசாரின் கோரிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் தலை சுத்த வைச்சுதுங்க... அப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விபடவே இல்லை. கூட்டணி உடைக்க பத்திரிக்கையாளர்கள் சதி செய்றீங்களான்னு எரிஞ்சு விழுந்தார். மேலும் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரையும் நீங்க எந்த த்திரிக்கைன்னு கேட்டுட்டுதான் அங்கிருந்து நகர்ந்தார். பத்திரிக்கையாளர் கருணாநிதி (!) தலைவராக இருக்க கட்சியின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றும் அமைச்சராகி இருக்கிற பன்னீர் செல்வம் செய்தி படிக்க கூட நேரம் இல்லபோல... முரசொலி படிச்சா மட்டும் போதும் நாளைய வரலாறை தெரிந்து கொள்ளலாம்னு முடிவு பண்ணிட்டாரு போல...  பன்னீர் செல்வம் பேசாமல் ஒரு மீடியா ஸ்கூல் ஒன்னு ஆரம்பிக்கலாம். அதுல பத்திரிக்கையாளர் எந்த கேள்வி எல்லாம் கேட்க கூடாதுன்னு கிளாஸ் எடுக்கலாம். நல்ல ஐடியா மிஸ் பண்ணீராதீங்க.

Aug 24, 2010

சட்டைசெய்யாத சட்டம்

ஸ்வீடனில் பாலியல் பலாத்கார வழக்கில், விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது.
இரண்டு வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் அசாஞ்சுக்கு எதிராக கடந்த 20ம் தேதி கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஸ்வீடனின் அரசின் சட்டப்பிரிவு செய்தித் தொடர்பாளர் கிரெண் ரோசந்தர் தெரிவித்திருந்தார்.

பெண்கள் இருவர் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த ஜூலியன் அசாஞ்ச், இதுகுறித்து விக்கிலீக்ஸ்சின் டிவிட்டரில் தகவலைப் பகிர்ந்துகொண்ட போது, "இவை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இந்த விவகாரம் மிக ஆழமாக மனதை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது," என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது என கடந்த 21 ம் தேதி மாலை ஸ்வீடன் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் ஈவா ஃபின்னி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவை பூர்விகமாக கொண்ட அசாஞ்ச், பத்திரிகை சுந்தந்திரத்துக்காக போராடி வருபவர். தனது விக்கிலீக்ஸ் தளத்தில் மூலம் பல்வேறு அரசுகளின் ரகசியங்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தியவர்.

ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான அமெரிக்க ராந்ணுவத்தின் சுமார் 15,000 ரகசிய ஆவணங்களை தனது விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் அண்மையில் வெளியிட்ட அசாஞ்ச், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கடுங்கோபத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. அட இது அயல்நாட்டு செய்தி
தமிழகத்தில் நிலைமையே வேறங்க... வார்த்தைக்கு வார்த்தை தன்னை பத்திரிக்கையாளன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதியின் அடக்கு முறை ஸ்டைலே வேறங்க... ஜுனியர் விகடனில் கழுகார் பகுதியில் பொட்டு சுரேஷ் என்பவர் குறித்து (அழகிரியின் வலதுகரம்) செய்தி வெளியானது. உடனே பத்திரிக்கை சுதந்திரத்திற்கு சவால் விடும் விதமாக தினமலர் நாளிதழில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவிற்கு போராட்டம் நடத்துவோம்னு விளம்பரம் வந்தது. கொதித்தெழுந்த தமிழக பத்திரிக்கையாளர்கள் பொட்டின் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தாங்க... கடைசியில் பொட்டின் வக்கீல் அனுப்பிய நோட்டீஸ் ஜுவியில் செய்தியா வெளியிட்டாங்க... பழைய கதையை சொல்லி ஃபோர் அடிக்காதீங்கன்னு சொல்லுவிங்கன்னு தெரியும். இதுல காமெடி என்னன்னா முதலமைச்சர் கிட்ட இதுபற்றி நேரடியாக புகார் கொடுக்க அனுமதி கேட்டாங்க... உடனே சிஎம் அனுமதி கொடுத்தாரு.. எப்ப தெரியுமா...ஜுவியில் மறுப்பு செய்தி ஸ்டைலில் கட்டுரை வந்தவுடன்...ஆனால் வழக்கு மட்டும் போடலிங்க ஏன்னா பொட்டுவின் ஆதரவாளர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவோம்னு சொன்னதுல்ல தப்புல்லன்னு சிஎம் நினைக்கிறார் போல... வாழ்க ஜனநாயகம், வெல்க சட்டம் ஒழுங்கு. வேதனையுடன் ஜுனியர் ரிப்போர்ட்டர்

Aug 23, 2010

கருணாநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன் ?

கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக...கலைஞர் கதை,வசனத்தில்..., கலைஞர் பேரன் தயாரிப்பில்..., கலைஞர் பேரன் இயக்கத்தில்.., கலைஞர் பேரன் நடித்த..., புத்தம் புதிய திரைக்காவியம்...கலைஞர் டிவியில் என்று தினமணியில் அடடே... என்ற மதியின் கார்டூனில் கிண்டல் செய்யபட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சினிமா கலைஞர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய கருணாநிதி, வாரிசுகள் கலைத்துறையிலும், அரசியல் துறையிலும் வருவது சகஜம்தான். ஆனால் என்னை மட்டும் குறி வைத்து ஏன் தாக்குகிறார்கள் என்பதை பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் திராவிட இனத்துக்கு பாடுபடுவதால் அதனை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே என்னை குறி வைத்து என் வாரிசுகள் பற்றி பேசுகின்ற குறுகிய நோக்கம் அவர்களுக்கு இருக்கிறது.

ரஜினி மருமகன் தனுஷ் நடிகராக இருக்கிறார். பிருதிவி ராஜ் மகன் ராஜ் கபூர் அவரது மகன்கள் சினிமாவில் இருக்கிறார்கள். சிவாஜி மகன் பிரபு நடிகராக இருக்கிறார். கலைஞர் மகன் இருக்க கூடாதா? பேரன், பேத்தி இருக்க கூடாதா? அவர்களை எதுவும் சொல்லவில்லை.

ரஜினி அரசியலில் இல்லாததால் அவரை விட்டு விடுகிறார்கள். நான் அரசியலில் இருப்பதால் இப்படி செய்கிறார்கள். கலையுலகத்துடன் எனக்குள்ள தொடர்பை யாரும் தடுக்க முடியாது என வீர ஆவேசமாக பேசியுள்ளார். உங்களது குடும்பத்தினர் கலையுலகில் வருவதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் உங்கள் பேரன் கலாநிதி தனது சன் டிவிக்கு போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக மற்ற சேனல்களை ஒழித்து கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளாரோ? சுமங்கலி கேபிள் விஷனை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதினதால்தான் உமா சங்கர் IAS நீக்கம் செய்யப்பட்டார் என்று அவர் மத்திய தாழ்த்தபட்டோர் ஆணையத்திற்கு எழுதிய புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளாரே?
உங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவர் பூணல் போடாத பிராமணன் (கருணாநிதியின் டிக்ஷனரியில்), தலித் குடும்பத்தை சேர்ந்த என் குடும்பத்தையே எதிர்க்கிறார் என்று அவரை சஸ்பென்ட் செய்தீர்களா... தமிழ் காத்த தலைவரே..(?) உங்கள் குடும்பம் கலைத்துறையில் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் டிவிக்காக மாடாக உழைத்த சரத் ரெட்டியின் கால்களை உடைத்து ஊனமாக்கிய கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் கலை உலக பிரபுவே ...?

உங்கள் பேரன் கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும் சொல்லி கருத்து கணிப்பு வெளியிட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை தீயிட்டு கொளுத்திய உங்கள் மகனின் ஆதரவாளர்கள் செய்த பாதக செயலை வரலாறு மன்னிக்காது என்பது உங்களுக்கு தெரியுமா? நடுநிலையான செய்திகளை வெளியிட்டு தனக்கு போட்டியாக ஜீ டிவி வளர்ந்து விடும் என்ற பயத்தில் பல இடங்களில் அந்த டிவியை மக்கள் பார்க்கவிடாமல் உங்கள் பேரன் கலாநிதி மாறன் ஆற்றி வரும் கலை சேவை தமிழர்களுக்கு தேவைதானா? பாலிமர் கேபிள் நிறுவனத்தின் உதவியில் பல மாவட்டங்களில் வளர்ந்தது சன் டிவி என்பது வரலாறு. ஆனால் அதே நிறுவனம் பாலிமர் தொலைக்காட்சி என்ற சாட்லைட் டிவியை ஆரம்பித்தவுடன் பல மாவட்டங்களில் அதன் ஒளிபரப்பை தடை செய்தாரே உங்கள் பேரன் கலாநிதி மாறன். பின்னர் அவர்கள் சன் டிவி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்திய பின்னர்தான் பாலிமர் டிவி ஒளிபரப்ப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்தானே?
 இப்போது தெரிகிறதா ரஜினியையும், பிரபுவையும் விமர்சிக்காமல் உங்கள் குடும்பத்தினரை மட்டும் நடுநிலையாளர்கள் ஏன் விமர்சிக்கறார்கள் என்று...மனசாட்சி இருந்தால் அண்ணாவின் சமாதியில் அமர்ந்து சிந்தியுங்கள் இல்லையெனில் மன்னித்துவிடவும். ஜுனியர் ரிப்போர்ட்டரின் பதிலடி தொடரும்....
 
Related Posts with Thumbnails

Sample text