Aug 31, 2010
பென்சிலின் விலை சிறுவனின் உயிர்
அண்ண ஒரு கூல் டிரிங்ஸ் கொடுங்க... என கடைக்காரரிடம் உரிமையோடு கேட்கிறான் 14 வயது சுபாஷ், அப்போது அவனது கண்ணில் பட்டது அழகான கலர் பென்சில், உடனே ஆர்வ கோளாறில் பென்சிலை எடுத்து பைக்குள் வைத்துள்ளான். இதனை கவனித்த கடைக்காரர் பையன் பென்சிலை திருடி விட்டதாக நினைத்து தனது சக நண்பர்களுடன் சேர்ந்து அடித்துள்ளார். அப்போது வலி தாங்காமல் துடிக்கும் சிறுவனை அவர்கள் தாறுமாறாக அடித்து உதைத்துள்ளனர். மேலும் சிறுவனுக்கு உடம்பில் சூடு வைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுவன் அவமானம் தாங்கமுடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இதனையறிந்த பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கடைக்காரருக்கு எதிராக புகார் கொடுக்கின்றனர். அப்போது அந்த கடைக்காரர் உயர் போலீஸ் அதிகாரிக்கு வேண்டபட்டவர் என்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். இந்த தகவல் பத்திரிக்கைகளுக்கு கசிய புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கண்துடைப்பிற்காக 3 பேரை கைது செய்துள்ளனர். இது நடந்தது கல்வியறிவு குறைவாக உள்ள ஜார்கண்ட் மாநிலத்திலோ அல்லது பீகாரிலோ அல்ல, சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில்தான். போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து கேட்டால், பெற்றோரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். உண்மை நிலைமை எங்களுக்கு இன்னமும் தெரியாது என மழுப்புலான பதிலை கூறுகின்றனர். ஆனால் மனித உரிமை ஆர்வலர்களோ, வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் முதலில் இழுத்தடித்தது தவறு என குற்றம் சாட்டுகின்றனர். பென்சிலின் விலை சிறுவனின் உயிர் என்றால், கேட்கவே பரிதாபமாக இருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை, நாம், உள்ளூரில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான குரல் கொடுத்தால்தான் நமது அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் திருந்துவார்கள் என்பதை அனைவரும் மனதில் உறுதி மொழியாக ஏற்க வேண்டும். அதிகாரிகளின் பழக்கம் இருக்கிறது என்கிற தைரியத்தில் எதையும் செய்யலாம் எண்ணம் வளருவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலுக்கு சமம் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழ வேண்டும்.
0 கருத்துக்கள்:
Post a Comment