Sep 9, 2010

ஏழைகளின் கண்ணீரில் மன்மோகனின் சந்தோஷம்

நாட்டில் உணவு தானியங்கள் வீணாவது குறித்து பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 12ம் தேதியன்று தானியங்கள் வீணாகும் முன்பு அவற்றை ஏழைகளுக்கு வழங்குங்கள் என மத்திய அரசை கேட்டுக் கொண்டது. அதற்கு பதிலளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார்,  உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுரைதான் வழங்கியுள்ளது. அது உத்தரவு அல்ல எனக்கூறினார். இதனை கண்டித்த நீதிபதிகள், தாங்கள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டோம். அறிவுரை வழங்கவில்லை என தெரிவித்தனர். இப்பிரச்சினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. உடனே மத்திய அமைச்சர் சரத் பவார், உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்தார்.
இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் பத்திரிக்கை ஆசிரியர்களை தனது இல்லத்தில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் கொள்கை விஷயங்களில் தலையீடுவதை உச்சநீதிமன்றம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்குவது எ ன்பது நடைமுறைக்கு ஒவ்வாத செயல் என கூறியுள்ளார். ஒன்று மட்டும் புலனாகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கோ அல்லது அமெரிக்க நிறுவனங்களோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குங்கள் என நீதிமன்றம் கூறியிருந்தால், மன்மோகன் சிங் மகிழ்ச்சி அடைந்திருப்பார். பாவப்பட்ட ஏழைகளை பற்றி அவருக்கு என்ன கவலை. அவர்தான் பொருளாதார நிபுணர் ஆயிற்றே. ஏழைகள் என்ன தொழிலதிபர்களா ? கூலி வேலைக்கு செல்லும் மனிதர்கள்தானே ? என்று எண்ணி விட்டார் போல் தெரிகிறது. எது கொள்கை முடிவு ? நமது நாட்டில் வீணாகி கொண்டிருக்கும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு கொடுங்கள் என்று சொல்வது தவறா ? அவருடைய வாதப்படியே வைத்து கொள்வோம். இந்தியாவில் 37 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு உள்ளனர். அவர்களுக்கு வழங்குவது எளிதான காரியமல்ல. அதற்குதான் அரசு ஊழியர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது என்பதை மன்மோகன் மனசாட்சியோடு நினைத்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இலவச கலர் டிவி கொடுக்கமுடியும் என்பது சாத்தியம். நாட்டில் உள்ள அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்க முடியும் என்பது சாத்தியம். இப்படி இவர்களுக்கு வசதியாக உள்ள திட்டங்களை மட்டும் நிறைவேற்ற முடிகிறது. யாரையும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து சாப்பிட சொல்லுங்கள் என்று நாம் கேட்கவில்லை. ஒரு எலியோ, பூச்சியோ தின்று வீணாகி கொண்டிருக்கும் உணவு தானியங்களை 6 அறிவு படைத்த மனிதனுக்கு வழங்கினால் என்ன குறைந்தா போகிவிடுவார் மன்மோகன். பீகார் மாநிலத்திலும், மேற்கு வங்கத்திலும் மக்கள் பஞ்சத்தால் வாழ்வதாக அம்மாநில அரசுகளே அறிவித்துள்ள, அவர்களுக்கு இலவச உணவு என்பது அத்தியாவசிய உதவி என்பது பிரதமருக்கு தெரியாதா ? தெரியாமல்தான் கேட்கிறோம். கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பது  குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமே நடத்தாமல் மீனவர்களின் வாழக்கையை பற்றி கவலைப்படாமல் மத்திய அரசால் அனுமதி வழங்க முடிகிறது. ஒரு போபால் விஷவாயு கசிவிற்கு எல்லா கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுக்கின்றன. நல்ல விஷயம்தான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பணக்காரர்களின் கைப்பாவையாக திகழும் ம(ண்)மோகன் சிங்கை இந்த விஷயத்தில் யாரும் கண்டிக்கவில்லையே ? ஏன் என்றால் சிபிஐ மத்திய அரசின் கைவசம் உள்ளது. அதைவைத்து மிரட்டும் கலையை காங்கிரஸ் அரசு நன்றாக தெரிந்து கொண்டுள்ளது. ஒரு முறையாவது மக்களை நேரடியாக சந்தித்து தேர்தலில் நின்று ஜெயித்து இருந்தால்தானே ஏழைகள் பற்றி மன்மோகன் சிங் சிந்தித்து இருப்பார். அவருக்குதான் வசதியாக ராஜ்யசபா இருக்கிறதே, அங்கு ஜால்ராக்களின் தயவுடன் எம்.பி.யாகி விட்டவர்தானே மன்மோகன். ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது நாட்டில் உள்ள அரசு குடோன்களில் வீணாகும் தானியங்களை 10 லட்சம் ஏழைகளுக்கு 6 ஆண்டுகள் வரை கொடுக்க முடியும் என்று, இதனை நாம் சொல்லவில்லை மத்திய அரசின் விவசாயத்துறையின் புள்ளி விபரம்தான் கூறுகிறது. இதையெல்லாம் அறிந்து கொள்ள மன்மோகன் சிங்கிற்கு சிறிது காலம் ஓய்வு கொடுப்பதே நாட்டிற்கு நல்லது என்பது மேன்மக்களின் வாக்காக உள்ளது.

4 கருத்துக்கள்:

Dr. Kanagaraj Easwaran said...

அன்புள்ள மக்களே,
மன்மோகன் சிங் நேர்மையாளர் தூய்மையான அரசியல் வாதி என்பதும் நல்ல பொருளியியல் அறிஞ்ர் எனபதும் இதன் முலம் பொய்யாகி இருக்கிறது. அடிப்படை சிக்கலான உணவுப்பதுகாப்புக்கு பணியாற்றாமல் பதுக்கல்கார வணிகர் கூட்ட திற்கு வால் பிடிக்கிற இவர் இது மூலம் அடையாளம் கானப்பட்டிருகிறார். உச்ச நீதி மன்றம் அரசின் அதிகார வரம்பில் தலையிடவில்லை மாறாக மறக்கப்பட்ட அரசின் கடமையை வலியுறுத்தி இருக்கிறது. இந்தியத் திரு நாட்டின் குடிமகனின் வாழ்வுரிமையான உணவுக்கு வழிவகை செய்திருக்கிறது. விலை வாசி உயர்வால் அல்லல் படும் பரிதவிக்கும் ஏழை மக்களுக்கும் புனித சேவை செய்யும் உச்சநீதி மன்றம் போற்று தலுக்குறியதே. உணவு வழங்க மறுக்கும் உச்சநீதி மன்ற ஆணையை மதிக்காத மன்மோகன் சிங் அவரது அரசு கண்டனத்திற்கு உரியது.
அனைவருக்கும் போதிய நல்ல உணவைப் பெற உரிமையுண்டு.
இதை நிறைவேற்ற அரசுக்கு கடமையுண்டு
கனகராஜ் ஈஸ்வரன்

Anonymous said...

சாட்டையடி...மன்மோகனுக்கு சோனியாவிற்க்கு பூங்கொத்து கொடுப்பதைப் பற்றி சிந்திக்கத்தான் நேரம் இருக்கும் போல் தெரிகிறது...பீகாரில் நக்ஸல்களால் கடத்தப்பட்ட காவலரை அவர்கள் சுட்ட கொன்றதைப் பற்றி கவலைப்படாமல் சோனியா மீண்டும் காங்கிரஸ் தலைவி ஆனதற்கு ”க்யூ”வில் நின்று பூங்கொத்து கொடுக்கும் அடிமையை பிரதமாரக உட்கார வைக்க வேண்டிய அவலம் இந்தியர்களுக்கு...

Anonymous said...

ஒரு அயல்நாட்டுக்காரியின் அடிமை இதைவிட என்ன செய்ய முடியும்!!

Anonymous said...

அயல் நாட்டு அரசியல் தலைவியின் கைப்பாவை என்பதை விடவும் உலகவங்கி மற்றும் அமெரிக்க அரசுகளின் கைப் பாவை என்பதால் தான் உணவு தானியங்களை பூச்சிகள் தின்பது மனிதர்கள் உண்பதை விட மேலானது என நினைக்கிறார் மனமோகனர். ஏழை மக்கள், விவசாயிகள் எப்படி போனால் என்ன பெரும் பணக்காரர்கள், வியாபாரிகள், பன்னாட்டு நிறுவனகள், அமெரிக்க முதலாளிகள் கொழுக்க கொள்கை முடிவெடுக்கும் பொருளாதார வல்லுநர் நம் மேதகு பிரதமர். பொருளாதார வளர்ச்சி தான் வேண்டும் வறுமையும் சமுக ஏற்ற தாழ்வும் என்ன ஆனால் எனக்கென்ன என்னும் இவரா நம் தலைவர் என்ன வெட்ககேடு.

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text