எந்திரன் – திரும்பும் திசை எல்லாம் இச்சொல்லைக் கேட்க வைத்திருக்கிறது சன் குழுமம். எந்திரன் படத்தைப் பற்றியும் படம் முதல் மூன்று நாட்களில் பெற்ற தொகையைப் பற்றியும் குறுஞ்சேதிகள் அனுப்பப்படுகின்றன. அந்த நடிகரின் உருவப் படங்களுக்குப் பால், பன்னீர் என ஊற்றுவதை சன் குழுமம் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ மக்கள் எந்திரனைத் தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாத அளவு அந்நிறுவன ஊடகங்கள் செயல்படுகின்றன.
முற்போக்குச் சிந்தனையாளர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் எந்திரனுக்கு எதிராக அணிதிரளத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு திரைப்படத்திற்கு எதிராகச் சிந்தனையாளர்கள் அணிதிரள்வது என்பது இதுவே முதல்முறையாகும். த.மு.க.எ.சங்கம் தன்னுடைய அழுத்தமான எதிர்ப்பைப் பதிந்திருக்கிறது. எந்திரன் என்னும் ஏகாதிபத்தியன் எனத் தினமணி கிழித்திருக்கிறது.
ஆனாலும் எந்திரனுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் தெரியாத இரசிகர்கள், ‘பொழுதுபோக்கிற்காக ஒரு படம் பார்ப்பது தவறா?’ என வினா எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். விவரம் தெரியாத இளைஞர்கள் தாம் பால், பன்னீர் என அலைவார்கள் எனப் பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்களில் ஐந்து இலக்கத்தில் சம்பளம் வாங்குகின்றவர்களும் அவர்களால் முடிந்த கோமாளித்தனத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.
எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் இரசினியின் படத்திற்குப் பண மாலை போட்டுக் கொண்டு ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள திரையரங்கு ஒன்றில் எந்திரனுக்குப் படங்கள் வைத்து நம்முடைய இளைஞர்கள் தங்களுடைய தமிழின உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தச் சமூகத்தின் கல்விநிலையை விட உயர்ந்த கல்வி, இந்தச் சமூகத்தில் அறுபது வயதில் ஒருவர் பெறும் சம்பளத்தில் இருபது வயதிலேயே பெற்றிடும் வாய்ப்பு என அனைத்தையும் பெற்றுவிட்டு எப்படி இந்த இளைஞர்களால் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய முடிகிறது என்று தெரியவில்லை.
படம் பார்ப்பது, அதைப் பற்றிக் கருத்து கூறுவது, என்பவை ஒருபக்கம் இருக்கட்டும். அதைப் படத்தைப் பற்றிய கண்ணோட்டத்தில் நாம் அணுகுவோம். ஆனால் இரசினிக்கும் சங்கருக்கும் சன் குழுமத்திற்கும் பக்தர்களாக நீங்கள் எப்படி மாறிப் போனீர்கள் இளைஞர்களே? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப எதைக் காட்டினாலும் இப்படிப் பைத்திய நிலை அடைந்துவிடுவீர்களா? இப்போது உங்களிடம் வெளிப்படும் தமிழின உணர்வும் ஈடுபாடும் இலங்கையில் கொத்துக் கொத்தாகத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது எங்கே போனது? இலங்கையை விடுங்கள்! இரண்டாண்டுகளுக்கு முன் பொருளியல் வீழ்ச்சியைக் காரணம் காட்டிப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்களே! அப்போதாவது இந்த ஒற்றுமையையும் உணர்வையும் காட்டியிருந்தால் பல பேர் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களே!
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் நம்மைப் பற்றிக் கூட நாம் சிந்திக்க மறந்து, தலைவர் புகழைப் பாட வைக்க முதலாளிகளால் முடிகிறது. தலைவர் புகழ் பாடுவது என்னும் ஒன்றில் உணர்வு வயப்பட்டு விழுந்ததால் தான் அறுபது ஆண்டுகாலத் தமிழக வரலாறே மாறிப்போனது என்பதை மறந்து விடாதீர்கள். ஈழத்திலும் மலேசியாவிலும் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது நம்முடைய அறிவை மழுங்கடிக்கச் செய்தது அந்த உணர்வு தான்! 'நாங்கள் நல்லது செய்ய வில்லை என்று யார் சொன்னது? நல்லதையும் செய்வோம், எந்திரனுக்காகச் சில கோமாளித்தனங்களும் செய்வோம்' என்று சில மென்பொறியாளர்கள் விடை கூறுகிறார்கள். நீங்கள் நல்லது செய்யாவிட்டாலும் ஒன்றுமில்லை; கெட்டது செய்யத் தொடங்கிவிடாதீர்கள் என்பது தான் நம்முடைய வேண்டுகோள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புகின் என்கிறது தமிழ். 'அல்லவை தேய அறம் பெருகும்' என்கிறார் திருவள்ளுவர்.
கொசுறுச் செய்தி: தமிழ் இளைஞர்களின் கடவுளாக சன் குழுமத்தால் அடையாளம் காட்டப்படும் இரசினி, ‘பால் தாக்கரே தனக்குக் கடவுள் போன்றவர்’ என்று சொல்லியிருக்கிறார். எனவே இனித் தமிழகத்தில் பால் தாக்கரேவிற்கும் பாலபிசேகமும் பன்னீர் அபிசேகமும் நடத்தலாம்.
4 கருத்துக்கள்:
மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் - இப்படித்தான் வார்க்கப்பட வேண்டும் என்பது இன்றைய உலகமய கார்ப்பரேட் தாதாக்களின் விருப்பம். அப்போதுதான் அவர்கள் வேலையைச் செய்தோமா, நல்ல சம்பளம் வாங்கினோமா, அப்புறம் ஜாலியாக இருந்தோமா என்று நாளைக் கழித்துக்கொண்டிருப்பார்கள். சுரண்டல், ஆதிக்கம் அது இது என்றெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள். சன் குழுமம் ஒரு கார்ப்பரேட் உலக தாதாதானே?
தலைவா பின்னிட்ட,,,,
வர்த்தக சூதாடிகளால் தமிழ் சமூகம் சீரழிக்கப்படுகிறது.... இதற்கெதிராக ஒன்றிணைவோம்,,,,, உரத்து குரல் கொடுபோம்
//இந்தச் சமூகத்தின் கல்விநிலையை விட உயர்ந்த கல்வி, இந்தச் சமூகத்தில் அறுபது வயதில் ஒருவர் பெறும் சம்பளத்தில் இருபது வயதிலேயே பெற்றிடும் வாய்ப்பு என அனைத்தையும் பெற்றுவிட்டு எப்படி இந்த இளைஞர்களால் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய முடிகிறது என்று தெரியவில்லை.//
இதுதான் பெரும்பாலோர் செய்யும் தவறு. ஒருவன் ஐந்து இலக்க சம்பளம் வாங்குவதாலோ அல்லது மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதினாலோ யாரும் அவர்களை அறிவு ஜீவிகள் என்று நினைத்துவிட வேண்டாம். நான் பல காலம் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் உயர் பதவில் வேலையில் இருக்கின்றேன். பல முறை இவர்களுடைய அறிவு என்னை ஆச்சர்யத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஏனெனில் சாதாரண பாமரனிடம் உள்ள சிந்திக்கும் திறன் கூட இவர்களிடம் கிடையாது. இவர்களிடம் அதிஹபிரசங்கி தனமும் , ஏதோ முழு உலகமும் தங்கள் எழுதும் பிழளைகள் நிறைந்த கோடில் இயங்குவதாக நினைப்பு மட்டுமே இருக்கிறது.
இப்படிக்கு
பாமரன்
hai its just a jolly moment.dont be serious concern on this.normally people wnt to gathering to pleasure themself,rajini is a focal point thatsit.he is not a maincore.our happyness is a main core.thats passed one day thatsit.but ur like people still holding on that.
hella comout boys
Post a Comment