அது ஒரு சிறு குடும்பம்! அன்றைக்குப் பொங்கல் திருநாள்! வீட்டுச் சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த சாமிப் படங்களுக்கு எல்லாம் வேலன் பூ மாலை அணிவித்துக் கொண்டிருந்தான்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் வேலன் வீட்டில் பெற்றோருக்கு ஒரே பிள்ளை! வரிசையாக மாலை மாட்டிக் கொண்டிருந்த போது அவனுடைய பாட்டி தாத்தா படங்களுக்கும் மாலை அணிவித்து விட்டான் அவன். அதைப் பார்த்ததும் அவனுடைய அப்பா அதிர்ந்து போய் விட்டார்! ஏய் வேலா! பாட்டி தாத்தா படங்களுக்கு மாலை போடக்கூடாது! என்று அவனிடம் கூறினார் அவர். வேலனுக்கு ஒன்றும் புரியவில்லை! சாமிப் படங்களுக்கு மாலை அணிவித்த போது ஒன்றும் சொல்லாத அப்பா இப்போது ஏன் இப்படிச் சொல்கிறார் எனத் தெரியவில்லையே! எனக் குழம்பிப் போய்விட்டான். ‘ஏன் அப்பா இப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டான். ‘வேலா! இறந்தவர்கள் படங்களுக்குத் தான் மாலை அணிவிக்க வேண்டும்! பாட்டியும் தாத்தாவும் உயிருடன் இருக்கிறார்கள் அல்லவா? எனவே மாலை அணிவிக்கக் கூடாது! என்று அவர் விளக்கம் சொன்னார்.
இதைக் கேட்டதும் வேலன் இன்னும் குழம்பிப் போய்விட்டான். அவனுடைய ஐயத்தைத் தந்தையிடம் கேட்கவும் அச்சமாக இருந்தது. இருந்தாலும் மண்டையைக் குழப்பியபடியே இருந்ததால் மெல்ல அப்பாவிடம் சென்று ‘அப்பா! இறந்தவர்களுக்குத் தான் மாலை போட வேண்டும் என்று சொன்னீர்களே! அப்படியானால் எல்லாச் சாமியும் இறந்து போய்விட்டதா?’ எனக் கேட்டான். அவனுடைய கேள்விக்கு என்ன விடை சொல்வதென்று தெரியாமல் அப்பாவிற்குத் தலைசுற்றே வந்து விட்டது. இ. ஆ. பணி அலுவலர் வெ. இறையன்பு எழுதிய குட்டிக்கதை இது!
கதை சிறிதாக இருந்தாலும் அது சொல்லும் உண்மை என்னவோ மிகப்பெரிது! ஆம்! நம்மில் எத்தனைப் பேர் இக்கதையில் சொல்வதைப் போலக் கடவுள் சிலைகளிலும் படங்களிலும் வாழ்வதாக நினைத்து மூட நம்பிக்கையின் பக்கம் சென்று கொண்டிருக்கிறோம். கடவுள் கல்லிலும் படத்திலும் இல்லை என்பதை நாம் உணரும்போது கட்டாயம் மசூதி, கோவில் எனச் சண்டை போட்டுக் கொண்டிருக்க மாட்டோம். எல்லோரும் கடவுளுடைய குழந்தைகள் என்பதை உணர்ந்து உலக அமைதிக்கு உறுதுணையாக இருப்போம்! இனியும் வேண்டாம் இன்னொரு டிசம்பர் 6!
2 கருத்துக்கள்:
நல்ல கதை...நல்ல கருத்து
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே கருத வேண்டியதை மறந்தாச்சு
என்பது பட்டுக்கோட்டையின் வைர வரிகள்.
கடவுள் உருவத்தை வீட்டில் வைத்திருப்பவர்கள் இறந்து போனவர்களின் உருவப்படத்தையும் உடன் சேர்த்து வைத்து வழிபடுதல் தவறு என்றும் சொல்லித்திரிகிறார்கள் சிலர் பக்தி எனும் போர்வையில்...
Post a Comment