Sep 13, 2010

பிரதமர் ம(ண்)மோகனின் தேசிய கவலை

அருந்ததி ராய்





2010 செப்டம்பர் இருபது OUT LOOK இதழில் வெளிவந்துள்ள ஊடகவியலாளர் அருந்ததிராயின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
Cartoon Courtesy -www.cartoonstock.com                         
            இந்திய அரசு இரண்டே இரண்டு வாரங்கள் நடத்தப்போகும் விளையாட்டுப் போட்டிக்காகத் தொள்ளாயிரம் கோடி ரூபாயைசெலவழிக்கிறது.  அத்தனையும் மக்களுடைய பணம்!  இத்தனைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல், மலேரியா, டெங்கு எனப் பல காரணங்களைக் கூறிப் பன்னாட்டு வீரர்கள் பலர் இப்போட்டியைப் புறக்கணித்து விட்டார்கள்.  இங்கிலாந்து இராணிக்கோ இப்போட்டிகள் (காமன்வெல்த் நாடுகள் என்பவை இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த நாடுகள் அனைத்தும்தாம்!) பற்றிக் கனவு கூட வரவில்லை.  இவ்வளவு பணத்தையும் அரசியலாளர்களும் விளையாட்டுத்துறை அலுவலர்களும் தாம் பங்கு போடப் போகிறார்கள்.  ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கு குறைவாகச் சம்பாதிக்கும் நம்முடைய மக்களுக்கு ‘இவ்வளவும் நம்முடைய பணம்’ என்பது கூடத் தெரியாது.  அவர்களைப் பொறுத்தவரை இந்த விளையாட்டுப்போட்டிகள் எல்லாம் கண்ணுக்கெட்டாத கற்பனைதான்! 

அறுபத்து நான்காவது ஆண்டு விடுதலை நாள் விழாவில் மன்மோகன்சிங்கு எப்படிப் பேசியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பதன் கற்பனைதான் இது!
                        ‘சகோதர சகோதரிகளே!  நீங்கள் எல்லோரும் உணவுப்பொருள் விலை பற்றிக் கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!  நம் நாட்டில் அறுபத்தைந்து கோடிப் பேர் உழவர்களாகவும் உழவுக்கூலிகளாகவும் இருக்கிறீர்கள்!  ஆனால் பாருங்கள்!  உங்களுடைய மொத்த உழைப்பினால் பதினெட்டு விழுக்காட்டிற்கும் குறைவான அளவில்தான் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு உதவுகிறீர்கள்!  தகவல்தொழில்நுட்பத்துறையைப் பாருங்கள்!  மக்கள் தொகையில் 0.2 விழுக்காடு தான் இருக்கும் அவர்களால் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஐந்து விழுக்காட்டளவு உதவி கிடைக்கிறது.  உங்களையும் அவர்களையும் சமமாக எப்படி ஒப்பிடுவது ?
என்னருமைக் குடிமக்களே!  நூறு கோடிஸ்வர இந்தியர்களின் கைகளில் நாட்டின் இருபத்தைந்து விழுக்காட்டு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) இருக்குமாறு நம்முடைய பெருமைமிக்க இந்தியாவை உருவாக்கி வருகிறோம்.  சொத்து ஒரே இடத்தில் இருப்பது தானே நல்லது?  பத்துப்பேர் சேர்ந்து சமைத்தால் சாப்பாடு சுவையாக இருக்காது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்!  ஆகவே நமது கோடிஸ்வரர்களும் அவர்களுடைய சொந்தங்களும் அவர்களுக்கு நெருக்கமான அரசியலாளர்களும் நன்றாக வாழுமாறு நாம் பார்த்துக்கொள்கிறோம். 
             இவற்றை எல்லாம் குடியாட்சி மூலம் மட்டும் கொண்டு வந்துவிட முடியாது என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.  ஆகவேதான் கனிமவளம் நிறைந்த பகுதிகளில் வாழ்வோரை இராணுவம், காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, ஆயுதப்படை, தொழிற்சாலைப் பாதுகாப்புப்படை, இந்தோ திபெத்தியப் படை எனப் பல படைகளைக் கொண்டு நொறுக்கி வருகிறோம்.  இந்த வகை ஆய்வுகளை நாகலாந்து, மணிப்பூர், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் தான் தொடங்கினோம். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை.  ஆகவே தான் குடியாட்சி அங்கே வர வேண்டும் என்பதற்காக அரைக் கோடிப் பேருக்கும் அதிகமான இராணுவ வீரர்களைக் களம் இறக்கியிருக்கிறோம்.  அங்கே ஊரடங்கு இருந்த போது காவல்துறை மீது கற்கள் வீசிய காஷ்மீரிய இளைஞர்கள் அனைவரும் லஷ்கர் இ – தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர்.  அவர்களும் வேலை கேட்டு இப்படிக் கற்களை வீசினார்களே தவிர விடுதலை கேட்டு இல்லை!  ஆனால் ஐயோ பாவம்!  அவர்களுடைய விண்ணப்பங்களைப் படித்து என்ன வேலை கொடுக்கலாம் என முடிவெடுக்கும் முன்பே நம்முடைய காவல்துறையால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள்!  ஆகவேதான் இனிமேல் அவர்களைச் சுட்டுக்காயப்படுத்தினால் மட்டும் போதும் – கொல்ல வேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறேன். 


2 கருத்துக்கள்:

Unknown said...

சரியோ தவறோ...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அறிவும்,திடமும் இருக்கும் ஒரு தலைமை தேவை...அடிவருடிகளால் இதை தவிர வேறென்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்...

Shan Nalliah / GANDHIYIST said...

THANKS FOR YOUR VOICE! DO SOMETHING! DO IT NOW!
ORGANISE OPPOSITION TO TAKE NEXT GOVT!

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text